ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர்.! தமிழக கல்லூரிகளில் காலிப்பணியிடம் இத்தனையா.?

Published : Jun 14, 2025, 12:12 PM IST
teacher

சுருக்கம்

தமிழக அரசு 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 252 புதிய படிப்புகளைத் தொடங்குகிறது. ஆனால், ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு கவுரவ விரிவுரையாளரை மட்டுமே நியமிக்கிறது. இது தரமான கல்வியைப் பாதிக்கும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஓராசிரியர் கல்லூரிகளா தமிழக அரசின் புதிய திட்டம்? தமிழ்நாட்டில் உள்ள 100 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 252 புதிய படிப்புகள் நடப்பாண்டில் தொடங்கப்படவுள்ள நிலையில், அந்தப் படிப்புகளை நடத்துவதற்காக 252 கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் நியமித்துக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுவாக கல்லூரிகளில் புதிதாக தொடங்கப்படும் துறைகளில் முதல்கட்டமாக 3 ஆசிரியர்களாவது நியமிக்கப்பட வேண்டும் என்ற குறைந்தபட்சத் தேவையைக் கூட நிறைவேற்ற தமிழக அரசு மறுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

தமிழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடம்

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 57 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 203 புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு, அப்படிப்புகளில் 10,396 மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் 43 கல்லூரிகளில் 49 புதிய பாடப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றில் 2,950 மாணவர் சேர்க்கை இடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 100 கல்லூரிகளில் 252 புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு, அவற்றில் 13, 346 மாணவர் சேர்க்கை இடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கு ஒரு படிப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் 252 ஆசிரியர்களை மட்டுமே நியமித்துக் கொள்ள அரசு அனுமதி அளித்திருக்கிறது. அவர்கள் கூட நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் மாதம் ரூ.25,000 மட்டுமே ஊதியம் பெறும் கவுரவ விரிவுரையாளர்கள் ஆவர்.

புதிதாக மாணவர்கள் சேர்க்கை- காலியாக இருக்கும் ஆசிரியர்கள்

இவை தவிர, 29 அரசு கல்லூரிகளில் ஏற்கனவே உள்ள 173 படிப்புகளில் 2008 மாணவர் சேர்க்கை இடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்காக ஒரே ஒரு ஆசிரியர் கூட கூடுதலாக நியமிக்கப் படவில்லை. புதிதாக அறிமுகம் செய்யப்படும் பாடப்பிரிவுகளுக்கு குறைந்தது 3 ஆசிரியர்களாவது நியமிக்கப்படுவது தான் தரமானக் கல்வி வழங்குவதற்கு போதுமானதாக இருக்கும். ஆனால், தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் ஒரே ஓர் ஆசிரியரை நியமிப்பது போதுமானதல்ல.

புதிய பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்வது குறித்து அரசுக்கு பரிந்துரைத்த கல்லூரிக் கல்வி ஆணையரகம், 252 புதிய பாடப்பிரிவுகளுக்கும் சேர்த்து 558 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க வேண்டும்; அவர்களின் ஊதியத்திற்காக ரூ.13.95 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத உயர்கல்வித்துறை, கல்லூரிக் கல்வி ஆணையரகம் கோரியதில் பாதிக்கும் குறைவாக ரூ.6.30 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது. கல்லூரி ஆசிரியர்களை நியமிக்கும் விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஆணையரகம் கோரியதில் பாதிக்கும் குறைவாக அரசு ஒதுக்கீடு செய்கிறது என்றால், உயர்கல்வி வழங்குவதை கத்தரிக்காயை பேரம் பேசி வாங்குவதைப் போல நினைக்கிறதா? என்ற ஐயம் தான் எழுதுகிறது. இது உயர்கல்வியை இழிவுபடுத்தும் செயலாகும்.

புதிதாக தொடங்கப்படும் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் ஒரே ஓர் ஆசிரியரை நியமிப்பது ஏன்.?

அண்மையில் தமிழ்நாட்டில் 11 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு கல்லூரியிலும் 5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, அவற்றை நடத்துவதற்காக தலா 12 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் ஆணையிட்டுள்ளது. புதிய கல்லூரிகளில் ஒரு பாடப்பிரிவுக்கு தலா 2 ஆசிரியர்களுக்கும் கூடுதலாக நியமிக்கும் தமிழக அரசு, ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் மட்டும் புதிதாக தொடங்கப்படும் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் ஒரே ஓர் ஆசிரியரை நியமிப்பது எந்த வகையில் நியாயம்? ஓர் ஆசிரியரைக் கொண்டு தரமானக் கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?

தமிழ்நாட்டில் தரமானக் கல்வியை வழங்குவதாகக் கூறிக் கொள்ளும் திமுக அரசு, 4000&க்கும் கூடுதலான பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாகவே நடத்தப்படுகின்றன. அதேபோல், அரசு கலைக் கல்லூரிகளின் துறைகளையும் ஓராசிரியர் துறைகளாக மாற்ற தமிழக அரசு துடிக்கிறது. தமிழக அரசின் இந்த அணுகுமுறை உயர்கல்வியின் தரத்தை குழி தோண்டி புதைக்கும் நிலைக்கு தான் இட்டுச் செல்லும்.

தமிழ்நாட்டில் உள்ள 129 கல்லூரிகளில் நடப்பாண்டில் 15 ஆயிரத்து 354 மாணவர் சேர்க்கை இடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அந்த மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்காக தமிழக அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ.6.3 கோடி மட்டும் தான். அதாவது ஒரு மாணவரின் உயர்கல்விக்காக மாதம் ரூ.410, பத்து மாதங்களைக் கொண்ட கல்வியாண்டுக்கு ரூ.4103 மட்டுமே அரசு செலவிடுகிறது. இந்தத் தொகையைக் கொண்டு ஒரு மாணவருக்கு ஆத்திச்சூடி கூட கற்பிக்க முடியாது எனும் போது தரமான பட்டப்படிப்பை வழங்குவது எவ்வாறு சாத்தியமாகும்? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.

10 ஆண்டுகளில் ஒரே ஒர் உதவிப்பேராசியர் கூட நியமிக்கவில்லை

தமிழக அரசு கல்லூரிகளுக்கு கடந்த பத்தாண்டுகளில் ஒரே ஓர் உதவிப் பேராசிரியர் கூட நியமனம் செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சுமார் 10 ஆயிரத்து 500 பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றில் 9000க்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 7500க்கும் கூடுதலான இடங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்திலும் கூட இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படுவதில்லை. இப்படியாக உயர்கல்வியின் தரம், சமூகநீதி ஆகிய இரண்டுக்கும் ஒரே நேரத்தில் துரோகம் இழைக்கிறது தமிழக அரசு. இந்தப் போக்கை இனியாவது கைவிட வேண்டும்.

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாகத் தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு முதலாம் ஆண்டில் குறைந்தது தலா இரு நிரந்தர ஆசிரியர்களாவது நியமிக்கப்பட வேண்டும். அனைத்துக் கல்லூரிகளிலும் உள்ள காலியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் கவுரவ விரிவுயை£ளர்கள் நியமிக்கப்பட்டால், அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்பட வேண்டும். தகுதியுடைய கவுரவ விரிவுரையாளர்கள் 2 மாதங்களில் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!