
கெடுபிடி என்ற பெயரில் நீட் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியரிடம் அதிகாரிகள் கொடூரமான கெடுபிடியை காட்டியுள்ளனர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவச் செல்வங்கள் நுழைவுத்தேர்வை சரியாக எழுதமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் இச்செயல் கண்டிக்கத்தக்கது டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு நடத்தப்பட்டு வந்த அனைத்திந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் சில மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்ததை அடுத்து, நீட் தேர்வுகளில் முறைகேடு நடக்காமல் தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது.
அதன்படி முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், தேர்வில் முறைகேடுகளை தடுப்பதற்காக, அத்தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ விதித்திருந்த கட்டுப்பாடுகள் அர்த்தமற்றவை; அபத்தமானவை. முழுக்கை சட்டை போட்டிருப்பவர்கள் கைகளில் விடைகளை எழுதி வைத்திருப்பார்கள் என்றோ, தூண்டுச்சீட்டுகளை மடிக்கப்பட்ட முழுக்கை சட்டைக்குள் பதுக்கி வைத்திருப்பார்கள் என்றோ தேர்வு அதிகாரிகள் நினைத்தால் மாணவர்களையும், சட்டையையும் சோதனை செய்து உள்ளே அனுப்பியிருக்கலாம்.
மாறாக, முழுக்கை சட்டையை கிழித்து அரைக்கை சட்டையாக மாற்றி அனுப்புவதும், மாணவிகளின் முக்கால் கை குர்தாவை பாதியாக கிழித்து அனுப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களாகும். சுயமாக சிந்திக்கும் திறனற்ற, எந்திரத் தனமான சிந்தனை கொண்ட அதிகாரிகளால் மட்டுமே இத்தகைய அபத்தங்களை அரங்கேற்ற முடியும்.
பல இடங்களில் மாணவர்கள் கைகளில் கட்டியிருந்த கயிறுகள் அறுத்து எறியப்பட்டிருக்கின்றன. மாணவிகள் அணிந்திருந்த மூக்குத்தி, தோடுகள் கழற்றப்பட்டுள்ளன. மூக்குத்திகளை கழற்றும் போது பல மாணவிகளுக்கு மூக்கில் ரத்தம் வந்த கொடுமைகளும் நடந்துள்ளன.
தோடு, மூக்குத்திக்கு தடை ஏன்? என்று கேட்டால், மின்னணு முறையில் தகவல்களை வெளியிலிருந்து வாங்கி, அதைப் பார்த்து காப்பி அடிப்பதைத் தடுப்பதற்காகத் தான் என்று அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.
இத்தகைய உத்திகள் எல்லாம் எந்திரன் போன்ற திரைப்படங்களில் மட்டும் தான் சாத்தியம். அதிலும் குறிப்பாக தேர்வு மையங்களைச் சுற்றிலும் அலைவரிசை வழியான தகவல் தொடர்புகளை முடக்க ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் இத்தகைய கட்டுப்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாத இழிவுகள் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.