தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது.! கைகட்டி வேடிக்கை பார்ப்பதா.? அன்புமணி ஆவேசம்

Published : Feb 19, 2025, 10:53 AM IST
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே செல்கிறது.!  கைகட்டி  வேடிக்கை பார்ப்பதா.? அன்புமணி ஆவேசம்

சுருக்கம்

திருப்பூரில் இளம்பெண், கணவர் மற்றும் குழந்தை முன்னிலையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சம்பவத்தைத் தொடர்ந்து இந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவை எடுத்துக்காட்டுகிறது. அரசு மற்றும் காவல்துறையின் மெத்தனப் போக்கை பாமக தலைவர் அன்புமணி கண்டித்துள்ளார்.

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்

தமிழகத்தில் பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்பான செய்தி தினந்தோறும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நேற்றைய தினம் கோவையில் பாலியல் புகாரில் கல்லூரி மாணவர்கள் கைது, இன்று திருப்பூரில் வடமாநில பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருப்பூரில் சொந்த ஊருக்கு  திரும்புவதற்காக காத்திருந்த இளம் பெண் ஒருவர், அவரது கணவர் மற்றும் குழந்தை கண் எதிரில்,   மூன்று பேர் கொண்ட கும்பலால் கத்தி முனையில் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக  வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. 

 

திருப்பூரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை

கோவையில் 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர்  கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியும்,  பதற்றமும் விலகுவதற்கு முன்பாகவே  திருப்பூரில்  இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து விட்டது என்பதையே காட்டுகிறது. தமிழ்நாட்டில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகாத நாட்களே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும்,

தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது ஒரு பெண்  மனித மிருகங்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள். இதைத்  தடுத்து நிறுத்த  வேண்டிய தமிழக அரசும், காவல்துறையும் இந்தக் கொடுமைகளை கைகட்டி  வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

திராவிட மாடல் ஆட்சியாளர்கள் எப்போது உணர்வார்கள்?

பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது குறித்து குற்றச்சாட்டுகள் எழும் போதெல்லாம் குற்றவாளிகளை கைது செய்து விட்டதாகக் கூறி அரசும், காவல்துறையும்  மார்தட்டிக் கொள்கின்றன. பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் நடமாடுவதை உறுதி செய்ய வேண்டியது தான் அரசு மற்றும் காவல்துறையின் பணி  என்பதையும், குற்றம் செய்தவர்களை கைது செய்வது என்பது இழைக்கப்பட்ட கொடுமைக்கு தேடப்படும் பரிகாரம் தானே தவிர அதில் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு எதுவும் இல்லை என்பதையும் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் எப்போது உணர்வார்கள்? என்பது தான் தெரியவில்லை.

வெளிமாநிலத்தவரை கண்காணியுங்கள்

திருப்பூரில் இளம்பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை  செய்தவர்கள் பிகாரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. வெளி மாநிலத்தவர் அதிகம் பணி செய்யும் திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் நிலையில், வெளி மாநிலத்தவரை கண்காணிக்கவும்,  சுற்றுக்காவலை வலுப்படுத்தவும் காவல்துறையும், அரசும்  நடவடிக்கை  எடுத்திருந்தால்  இந்தக் கொடுமை நடந்திருக்காது என அன்புமணி தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஷாக்கிங் நியூஸ்! பயங்கர சத்தத்துடன் ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து! அலறிய குடும்பத்தினர் நிலை என்ன?
புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!