தமிழக பள்ளிகளுக்கு வர வேண்டிய நிதி.! குஜராத், உ.பிக்கு பிரித்து கொடுத்த மத்திய அரசு- சீறும் அன்பில் மகேஷ்

Published : Feb 09, 2025, 01:30 PM IST
தமிழக பள்ளிகளுக்கு வர வேண்டிய நிதி.! குஜராத், உ.பிக்கு பிரித்து கொடுத்த மத்திய அரசு- சீறும் அன்பில் மகேஷ்

சுருக்கம்

மத்திய அரசின் PM ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் தமிழகத்திற்கு ரூ.2152 கோடி நிதி வழங்க மறுப்பு. இந்த நிதி குஜராத், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல். இதனால் தமிழக பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு.

தமிழகத்திற்கு நிதி கொடுக்காத மத்திய அரசு

கல்வி தான் மாணவர்களை எதிர்காலத்தில் சிறந்து விளங்க வழி வகை செய்கிறது. அந்த வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி, ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு மாநில அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளின் வளர்ச்சி பணிகளுக்காக நிதி ஒதுக்குவது வழக்கம். இந்த நிலையில் இந்த நிதியை பெற மாநில அரசுகளுக்கு மத்திய அரசு செக் வைத்தது. அதன் படி,  இந்த நிதியை மாநில அரசு பெறுவதற்கு மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தது.

சம்பளம் கொடுக்க திணறும் தமிழக அரசு

அதாவது  மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைய வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த திட்டத்தில் இதுவரை தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காமல் மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது. இதன் காரணமாக பள்ளி ஆசிரியர்களுக்கு உரிய வகையில் சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மாநில அரசே ஊதியம் உள்ளிட்ட பணிகளுக்கு நிதி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய ரூ.2152 கோடியை குஜராத், உத்திரபிரதேசம் போன்ற பிற மாநிலங்களுக்கு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மும்மொழி கொள்கை- மத்திய அரசு அழுத்தம்

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ.2152 கோடியை குஜராத், உத்திரபிரதேசம் போன்ற பிற மாநிலங்களுக்கு அளித்துள்ளது தமிழர் விரோத ஒன்றிய அரசு. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியான PMShri திட்டத்தில் நாம் இணைய வேண்டும் என ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துகிறது. அத்திட்டத்தில் இணைந்தால் தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்த நேரிடும் என்பதால்  முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி உறுதியுடன் நாம் மறுத்து வருவதால்,

மாணவர்களும், ஆசிரியர்களும் மன்னிக்க மாட்டார்கள்

 நமக்கு தரவேண்டிய நிதியை அவர்கள் ஆளும் மாநிலங்களுக்கு ஒதுக்கி உள்ளது பாசிச பாஜக அரசு. வஞ்சக மனப்பான்மையோடு செயல்படும் ஒன்றிய பாசிச அரசை மாணவர்களும், ஆசிரியர்களும் மன்னிக்க மாட்டார்கள்.  மாநில உரிமையைப் பெறும் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவோம். கல்வி விடுதலை ஒன்றே நமது மாநிலத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு தீர்வு தரும் என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!