அமித் ஷா காரைக்குடி வாகன பேரணி ரத்து: காரணம் என்ன?

By Manikanda Prabu  |  First Published Apr 11, 2024, 6:23 PM IST

தமிழ்நாட்டின் காரைக்குடியில் வாகன பேரணி பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈடுபடவிருந்த நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளது


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தமிழக அரசியல் தலைவர்களின் பிரசாரத்துக்கு மத்தியில் தேசிய தலைவர்களும் தீவிர சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடப்பாண்டில் மட்டும் பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 6 முறை வந்து பிரசாரத்தில் ஈடுப்பட்ட நிலையில், 7ஆவது முறையாக மீண்டும் வரவுள்ளார். அதேபோல், பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஏப்ரல் 4, 5 ஆகிய தேதிகளில் அவர் மதுரை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால், கடைசி நிமிடத்தில் அது ரத்து செய்யப்பட்டது.

Tap to resize

Latest Videos

அதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் இரண்டு நாட்கள் பயணமாக நாளை மீண்டும் தமிழ்நாடு வரவுள்ளார். அதன்படி, பிற்பகல் 3.05 மணியளவில் மதுரை விமான நிலையம் வரும் அமித் ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டரில் சிவகங்கை செல்கிறார். அங்கு, சிவகங்கை தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து வாகண பேரணி காரைக்குடியில் வாகன பேரணி நடத்த திட்டமிருந்தார். தொடர்ந்து, மாலை 6 மணிக்கு மதுரை வரும் அவர், மதுரை பாஜக வேட்பாளர் ராமசீனிவாசனை ஆதரித்து பிரசாரம் செய்த பிறகு, மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, மறுநாள் காலை 8 மணிக்கு மதுரையில் இருந்து கேரளா மாநிலம் செல்ல அமித் ஷா திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில், அமித் ஷாவின் காரைக்குடி வாகன பேரணி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை பாஜக வேட்பாளரான தேவநாதன் யாதவ் மீது பண மோசடி குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி வெளியிட்ட நிலையில், அமித் ஷாவின் காரைக்குடி வாகன பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், மீனாட்சியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவிருந்த அமித் ஷாவின் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் அம்மா உணவகம்: பாஜக தேர்தல் அறிக்கை!

அதேசமயம், அமித் ஷாவின் ஏப்ரல் 13ஆம் தேதி பயணத் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஏப்ரல் 13ஆம் தேதி திருவனந்தபுரம் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அங்கிருந்து வாகனம் மூலம் கன்னியாகுமரி வரும் அவர், வாகன பேரணி மூலம் பிரசாரம் செய்யவுள்ளார். இதையடுத்து, அங்கிருந்து புறப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் செல்லும் அமித் ஷா, ஹெலிகாப்டரில் திருவாரூர் சென்று மதியம் 3 மணிக்கு திருவாரூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசவுள்ளார்.


அதன்பிறகு, திருச்சி சென்று அங்கிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் அமித் ஷா, அங்கிருந்து ஹெலிகாப்டரில் தென்காசி செல்கிறார். அங்கு வாகன பேரணி மூலம் வாக்கு சேகரிக்கும் அவர், இரவு 8.15 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையம் வந்து அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

click me!