2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி என அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அமித்ஷா சென்னையில் செய்தியாளர்களிடம் இபிஎஸ் முன்னிலையில் தெரிவித்தார்.
AIADMK-BJP alliance confirmed for 2026 Assembly elections: தமிழ்நாட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. மத்தியில் ஆளும் பாஜக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை கூட்டணிக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருந்து வந்தது.
சென்னை வந்த அமித்ஷா
இதற்கிடையே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமித்ஷா நேற்று சென்னை வந்தார். அவர் அதிமுக, பாஜக கூட்டணியை இறுதி செய்யவும், தமிழ்நாடு பாஜக தலைவரை தேர்வு செய்யவும் சென்னை வந்ததாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்ததுபோல் தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் விருப்ப மனு தாக்கல் செய்தார்.
அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி
சென்னை வந்த அமித்ஷா கிண்டியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருந்தார். இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திப்பாரா? என கேள்வி எழுந்தது. இதன்பிறகு இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். ஹோட்டலுக்கு சென்ற எடப்பாடி பழனிசாமியை அமித்ஷா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதனைத் தொடந்து இருவரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி அமைப்பது தொடர்பாக பேசினார்கள்.
2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி
இதன்பிறகு எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா ஒன்று சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமித்ஷா, ''2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவும், பாஜகவும் இணைந்து தேர்தலை சந்திக்கும். 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சி தான் இருக்கும். இபிஎஸ் தலைமையில் தான் இந்த கூட்டணி இருக்கும்'' என்று தெரிவித்தார்.
Nainar Nagendran: தமிழக பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்! நாளை ஒருமனதாக தேர்வு!
எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி
தொடர்ந்து பேசிய அமித்ஷா, ''அதிமுக, பாஜக கூட்டணி இயல்பாக ஒன்று சேர்ந்த கூட்டணி. இதில் எந்தவித குழப்பமும் இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டணி இருக்கும். இந்த கூட்டணி 2026 சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறும். வெற்றிக்கு பிறகு மற்றவை குறித்து முடிவு செய்யப்படும். அதிமுக, பாஜக கூட்டணி இருவருக்குமே பலன் அளிக்கக்கூடியது. யார், யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பின்பு பேசி முடிவு எடுக்கப்படும். அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிடப்போவதில்லை'' என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா காலத்திலேயே கூட்டணி
தொடர்ந்து பேசிய அமித்ஷா, ''அதிமுக, பாஜக இடையே கருத்தொற்றுமை ஏற்படும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படும். எடப்பாடி தலைமையில் தான் தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெறும் என நான் தெளிவாக சொல்லி விட்டேன். நீண்ட வலுவான கூட்டணி அமைக்கவே செய்தியாளர்கள் சந்திப்பில் தாமதம் ஏற்பட்டது. ஜெயலலிதா இருந்தா காலத்திலேயே அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது'' என்றார்.
அதிமுக நிபந்தனை வைத்ததா?
மேலும் பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக நிபந்தனை ஏதும் விதித்ததா என செய்தியாளர்கள் கேட்டதற்கு 'அதிமுக எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை' என்று அமித்ஷா கூறினார். அப்போது அண்ணாமலையை மாற்ற அதிமுக நிபந்தனை விதித்ததாக தகவல் பரவியதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அதற்கு அமித்ஷா, ''தமிழக பாஜக தலைவர் என்பதால் தான் அண்னாமலை எனது அருகில் அமர்ந்து இருக்கிறார். அவர் இப்போதும் தமிழக பாஜக தலைவர் தான்'' என்றார்.
நீட் பிரச்சனை குறித்து பேச்சு
இதன்பிறகு நீட் விவகாரம் உள்ளிட்ட விவரஙக்ள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதில் அளித்த அமித்ஷா, ''மக்களின் பிரச்சனையை திசை திருப்புவதற்கு தான் நீட் பிரச்சனையை திமுக எழுப்புகிறது. தமிழக மக்களை சந்திக்கும்போது உண்மையான பிரச்சனைகளை எழுப்பி தேர்தலை சந்திப்போம். தமிழக மக்கள் மற்றும் தமிழ்நாட்டை பாஜக கவுரவமாக கருதியதே தவிர பிரச்சனையாக கருதியது இல்லை'' என்று கூறினார்.
டாஸ்மாக்கில் மிகப்பெரும் ஊழல்
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆளும் திமுகவை குற்றம்சாட்டிய அமித்ஷா, ''திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. நீட் பிரச்சனை, மும்மொழி கொள்கை, சனாதன கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு ஆகியவற்றை எழுப்பி திமுக சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மற்ற பிரச்சனையை திசை திருப்பி வருகிறது. டாஸ்மாக்கில் மிகப்பெரும் ஊழல் நடந்துள்ளது. இதற்கு முதல்வரும், துணை முதல்வரும் பதில் சொல்ல வேண்டும்'' என்றார்.
5 பேரை தாண்டி நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராவது எப்படி? பின்னணி காரணம் இதுதான்!