அதிமுகவை பாஜக விழுங்கிய கதையை சொல்லவா? லிஸ்ட் போட்டு இபிஎஸ்-ஐ பங்கம் செய்த விசிக!

Published : Jul 24, 2025, 08:12 AM IST
Aloor Sha Navas

சுருக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததற்கு, ஆளூர் ஷாநவாஸ் பதிலடி கொடுத்துள்ளார். 

தஞ்சாவூரில் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்: விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட்டுக் கொண்டிருப்பதாகவும், இன்னும் கொஞ்ச நாளில் விழுங்கிவிடும் என்றும் விமர்சித்திருந்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இத்தகைய விமர்சனத்துக்கு ஆளூர் ஷாநவாஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், நாகப்பட்டினம் எம்எல்ஏவுமான ஆளூர் ஷாநவாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: விசிகவை திமுக விழுங்கிவிடும் என்கிறார் எடப்பாடி. விழுங்குவதும் ஏப்பம் விடுவதும் பாஜகவின் வேலை. முனை மழுங்குவதும் பாதாளத்தில் விழுவதும் அதிமுகவின் நிலை.

அதிமுகவை பாஜக விழுங்கிய கதையை சொல்லவா?

* ஜெயலலிதா அம்மையார் உடன்படாத GST, உதய் மின் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அவர் மறைந்த உடன் கையெழுத்துப் போட்டது அதிமுக.

* வேளாண் சட்டம், CAA சட்டம், முத்தலாக் தடைச் சட்டம், டில்லி மாநில அரசின் அதிகாரம் பறிப்பு, காஷ்மீர் 370 பிரிவு நீக்கம் என்று பாஜகவின் அராஜகங்களுக்கு துணை போனது அதிமுக.

* அதிமுக பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட பொதுச் செயலாளரான சசிகலாவை அப்பொறுப்பில் தொடர முடியாமல் செய்தது பாஜக.

* அதிமுக எம்.எல்.ஏக்களால் தேர்வு செய்யப்பட்ட பின்பும் சசிகலா முதலமைச்சராக முடியாமல் போனதன் பின்னணியில் இருந்தது பாஜக.

* சசிகலாவால் முன்னிறுத்தப்பட்ட TTV தினகரனை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது பாஜக.

* OPS-ஐ தூண்டிவிட்டு தர்மயுத்தம் நடத்தச் செய்தது பாஜக.

* எடப்பாடி ஆட்சியை எதிர்த்து பேரவையில் வாக்களித்த OPS உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் செய்தது பாஜக.

* அதே OPS-உடன் EPS-ஐ சேர்த்து, அதிமுக உட்கட்சி விவகாரத்திற்காக கவர்னர் மாளிகையை பயன்படுத்தியது பாஜக.

* பாஜக நிகழ்ச்சிக்காக சென்னை வந்த அமித்ஷாவை விமான நிலையத்தில் கட்சிக் கொடியுடன் வரவேற்றது அதிமுக.

* பாஜக அணியை விட்டு விலகி 2024 தேர்தலை சந்தித்த அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க செங்கோட்டையனை கருவியாக்கியது பாஜக. உடனே பணிந்தது அதிமுக.

* கூட்டணிப் பேச்சுக்காக டில்லி சென்றதையே மறைத்தது அதிமுக. பல கார் மாறி வந்து அமித்ஷாவை எடப்பாடி சந்தித்தது கூட்டணிக்காகத் தான் என்று அன்றே போட்டுடைத்தது பாஜக.

* சென்னை செய்தியாளர் சந்திப்பில் கூட்டணி அறிவிப்பை செய்தது பாஜக. எதுவும் பேச முடியாமல் வாய்மூடி இருந்தது அதிமுக.

* இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடத்தை ஒழிப்போம் என்றது பாஜக. அதில் பங்கேற்று அசிங்கப்பட்டது அதிமுக.

* இந்து அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் நடத்துவதா என்று ஸ்கிரிப்ட் எழுதியது பாஜக. அதை வாசித்து அம்பலப்பட்டது அதிமுக.

* கூட்டணி ஆட்சி என்று ஓங்கி உரத்துச் சொல்கிறது பாஜக. இல்லை தனித்து ஆட்சி தான் என்று பேச வேண்டிய இடத்தில் பேசாமல், பூட்டிய வீட்டின் முன் சும்மா சவுண்டு விடுகிறது அதிமுக. அதிமுகவை பாஜக விழுங்கி 8 ஆண்டுகள் ஆகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தின் நிலையை இனி அதிமுக எட்டவே முடியாது என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்