
மதுபானங்களை, பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மதுபானங்கள், கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி, கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்க அனுமதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் மதுபான கடைகளை டாஸ்மாக் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிலையில், 1996 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட, தமிழக அரசின் ஆணைக்கு தடை கோரியும், பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுபானங்கள் விற்க தடை கோரியும் சென்னையைச் சேர்ந்த பிரதாப் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கண்ணாடி பாட்டில்களில் மதுபானங்கள் விற்கும்போது, அவை சுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் மதுபான ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால், பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி முறையில் மீண்டும் பயன்டுத்த முடியாத நிலை உள்ளது.
இது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் என்பதால், பிளாஸ்டிக் பாட்டில்களில் மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதித்து, 1996 ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என பிரதாப் அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஜி.ஆர்.சுவாமிநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையின்போது, இது குறித்து ஜனவரி 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்துக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.