
காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் வரைந்திருந்த ஆன்மீக படங்களை, அழித்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருவதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில், காமாட்சியம்மன், ஆதிசங்கரர், ராமானுஜர், ஏகாம்பரநாதர், வரதராஜபெருமாள் ஆகிய இந்து சமய ஆன்மீக ஓவியங்களை ரயில்வே நிர்வாகத்தினர் வரைந்திருந்தனர்.
இந்த ஓவியங்களை ரயில்வே வரைவதற்கு முன்பு, அங்கிருந்த அம்பேத்கர் படத்தை கழற்றி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 21 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பகுஜன் சமாஜ் கட்சியினர், மக்கள் மன்றம் அமைப்பினர் ரயில் நிலையம் சென்று, ரயில் நிலைய மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு வரையப்பட்டிருந்த ஆன்மீக ஓவியங்களை அவர்கள் அழித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து, இந்து முன்னணியினர், பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், இது குறித்து நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி சார்பில், போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆன்மீக படங்களை அழித்த மகேஷ், ஜெசி, அம்பேத்கர் பாலு, தஞ்சை தமிழன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.