
தாம்பரத்தில் ராணுவத்துறைக்கு சொந்தமான பகுதியில் விமானப்படைக்கான பயிற்சி மையம் உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வீரர்கள் வந்து பயிற்சி பெறுகின்றனர்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் எஸ்பால் சிங். இவரது மகன் சபீர் சிங் (23). தாம்பரத்தில் உள்ள விமான படை தளத்தில் பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு சபீர் சிங், விமான படை தளத்தை சுற்றி, வெளியாட்கள் உள்ளே நுழையாதபடி துப்பாக்கி ஏந்திய வீரர்களுடன் ரோந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். சுமார் 7.30 மணியளவில் சபீர் சிங், தன்னிடம் இருந்த துப்பாக்கியால், தன்னை தானே சுட்டுக் கொண்டார்.
இதை பார்த்ததும், உடன் இருந்த வீரர்கள் திடுக்கிட்டு திகைத்து நின்றனர். திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டு பல்வேறு பகுதிகளில் இருந்த வீரர்கள் அங்கு ஓடிவந்னர். ரத்த வெள்ளத்தில் சபீர் சிங் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
தகவலறிந்து சேலையூர் இன்ஸ்பெக்டர் செல்லப்பா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பணியில் இருந்த வீரர் சபீர் சிங், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்ப பிரச்சனையா அல்லது அதிகாரிகளின் டார்ச்சர் காரணமா என விசாரிக்கப்படுகிறது.