
சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், ஆந்திர மாநிலம் நெல்லூர், ரேணிகுண்டா, தடா ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மேலும், இந்த மருத்துவமனையில் தினமும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களை பார்ப்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
ஏழை எளிய மக்களுக்காக செயல்படும் அரசு மருத்துவமனையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. ஆனால், குடிநீர் வசதி போதுமானதாக இல்லை என்ற புகார் எழுந்தது.
இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் குறைந்த விலையில் குடிநீர் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி பஸ் நிலையங்கள் உள்பட பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் அம்மா குடிநீர் மையம் திறக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் அம்மா குடிநீர் மையம் இன்று திறக்கப்பட்டது. சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மருத்துவமனை டீன் நாராயணபாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் அம்மா குடிநீர் மையம் நேற்றே திறக்கப்பட இருந்தது. ஆனால், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவிக்கு வருமான வரித்துறை சம்மன் அளித்தது மற்றும் டாக்டர்கள் போராட்டத்தால் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.