
80 சதவீத நீதித்துறையில் ஊழல் மலிந்து கிடப்பதாகவும், 10 கோடி ரூபாய் கொடுத்து நீதிபதியானால், பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் என்று கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி கர்ணன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
சின்னச்சாமி சுவாமிநாதன் கர்ணன் அதாவது சி. எஸ். கர்ணன் அண்மைக்காலமாக இந்திய நீதித்துறையில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியவர்.
கடலூர் மாவட்டம், கர்ணநத்தம் கிராமத்தில் பிறந்தவர் நீதிபதி கர்ணன். மங்கலம்பேட்டை பேரூராட்சியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதியாண்டு வரை படித்து, பின்னர் 1983-இல் சென்னை சட்டக் கல்லூரியில் மூன்றாண்டு சட்டப் படிப்பை முடித்தவர்.
பின்னர் சென்னை நீதிமன்றங்களில் சிவில் வழக்குகளை கவனித்துக் கொண்டிருந்த கர்ணன், சென்னை பெருநகரக் குடிநீர் வடிகால் துறையில் சட்ட ஆலோசகராகவும், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசின் வழக்குகளை நடத்தி வந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகள் நீதிபதியாக பதவி வகித்த பின்னர் நீதிபதி கர்ணன் இந்திய உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையின் பேரில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி மாறுதலாகிப் சென்று அங்கு பணிபுரிந்தது வருகிறார்.
இம்மாறுதல் உத்தரவு தொடர்பாக, நீதிபதி சி. எஸ். கர்ணன், இந்தியப் பிரதமர் அலுவலகம், இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் மனுக்களை அனுப்பினார். மேலும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை இந்தியப் பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
நீதிபதி கர்ணனின் இந்த செயலை நீதிமன்ற அவமதிப்பாக கருதிய உச்சநீதிமன்றம், தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
மேலும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை எழுப்பிய நீதிபதி கர்ணனுக்கு மனநல சோதனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது.
இம்மாதம் 4-ம் தேதி கர்ணனுக்கு மருத்துவ சோதனை செய்து மே 8-ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு உத்தரவிட்டது.
இதில் கடும் கோபமும் ஏமாற்றமுமடைந்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், நீதிபதிகள் அமர்வின் முடிவை வழக்கத்துக்கு விரோதமானது, கேலிக்கூத்தானது என்று சாடினார்.
.இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், “நானா மனநிலை சரியில்லாதவன்? எனக்கு மனநோய் இருப்பதாக தீர்ப்பளிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யார்?
என்னுடைய வழக்கை விசாரித்து வரும் 7 நீதிபதிகளும் ஊழல்வாதிகள். எனவே என்னுடைய சம்மதம் இல்லாமல் டிஜிபி செயல்பட்டால் நான் அவருக்கு எதிராக உத்தரவு வழங்குவேன் என்று எச்சரித்துள்ளார்.
இந்திய நீதித்துறையை பெரும் பரபரப்புக்குள்ளாக்கி வரும் இப்பிரச்சனை நீதிபதிகளிடையே உச்சகட்ட மோதலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நீதிபதி கர்ணன், நீதிபதிகளை நியமிக்கும் பிரச்சனையில், 7 பேர் கொண்ட குழு ஒன்றை பிரதமர் நரேந்திர மோடி நியமித்திருப்பதற்கு பாராட்டுத் தெரிவித்தார். அந்த குழுவில் தலித் ஒருவரும் உறுப்பினராக இருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். தற்போது இந்திய நீதித் துறையில் 80 சதவீதம் ஊழல் மலிந்து கிடப்பதாக குற்றம்சாட்டினார்.
நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாகவும், வழக்கறிஞர்கள் மூலம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, நீதி விலை பேசப்படுவதாகவும் நீதிபதி கர்ணன் குற்றம்சாட்டினார்.
நீதிபதிகளிடம் பேரம் பேச பிரோக்கர்கள் இருப்பதாக தெரிவித்த கர்ணன், புரோக்கர் யார்? யார்? உள்ளனர் என்று சொல்லவா என கேள்வி எழுப்பினார்.
10 கோடி ரூபாய் கொடுத்து நீதிபதி பதவிக்கு வந்தால் பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் என அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
மேலும் இந்த நிகழ்ச்சி முழுவதும் பேசிய நீதிபதி கர்ணன் முழுக்க முழுக்க தூய சென்னை தமிழை பிரயோகித்திருப்பது குறிப்பிடத்தக்கது.