
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்து கட்டணங்களை உயர்த்த கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆம்னி பேருந்துகள் சங்கம் சார்பில் சில நாட்களுக்கு முன்பு தீபாவளி பண்டிகைக்கான கட்டணத்தை உயர்த்தி அறிக்கை வெளியிட்டிருந்தது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் தாமாகவே முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
ஆம்னி சங்கம் சார்பில் முதலில் வாதிடப்பட்டது. பின்னர் தமிழக அரசு சார்பில் வாதம் செய்யப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்து கட்டணங்களை உயர்த்த கூடாது. கடந்த தீபாவளியின் போது வசூலித்த கட்டணத்தையே தற்போது வசூலிக்க வேண்டும் என்றும், ஆம்னி பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த உத்தரவை மீறினால் சம்பந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக அரசு தலையிட்டு கட்டணத்தை நிர்ணயம் செய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை வலியுறுத்தியுள்ளது.