
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டமாக நடைபெற உள்ளது, தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், ஜூன் 1ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டமாக வாக்கு பதிவு நடைபெறுகின்றது. அதன் பிறகு ஜூன் மாதம் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் அண்மையில் பிரபல நடிகர் மற்றும் அணைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாஜகவில் இணைந்ததோடு, தனது கட்சியையும் பாஜகவுடன் இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல அவரது மனைவி பிரபல நடிகை ராதிகா அவர்களும் பாஜகவில் இணைந்து, எதிர்வரும் தேர்தலில் களம்காணவுள்ளார்.
இந்திய அளவில் பல நடிகர், நடிகைகள் பாஜகவில் இணைந்து வரும் நிலையில், தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல நடிகர் ஆர்த்தி கணேஷ்கர் இப்பொது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன் அக்கட்சியில் இணைந்துள்ளார். இதுகுறித்து பாஜக அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தனது முதலாவது வயது முதலே நடித்து வரும் வெகு சில நடிகர், நடிகைகளின் ஆர்த்தி கணேஷ்கர் அவர்களும் ஒருவர். 1990 ஆம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் "அஞ்சலி", அதே ஆண்டு பிரபல நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான "சத்ரியன்" உள்ளிட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஆர்த்தி நடித்திருக்கிறார்.
அதன் பிறகு பல முன்னணி நட்சத்திரங்களுடைய படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரமும் ஏற்று நடித்து வரும் ஆர்த்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தனுஷின் "படிக்காதவன்" மற்றும் "குட்டி" போன்ற படங்களுக்காக ஆனந்த விகடன் வழங்கும் சினிமா விருதுகளை வென்றவர் ஆர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது பாஜகவின் இணைந்து அவர் பணியாற்ற இருக்கிறார், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய தலைமை பண்பாலும், நல்லாட்சி திறனாலும் ஈர்க்கப்பட்டு அவர் பாஜகவில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அண்மையில் நடைபெற்ற ஒரு விழாவில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்பு ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ்கருடன் பாஜகவில் இணைந்தார்.