
Actor Vijay party second state convention : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக 200 தொகுதிகளை வெற்றி இலக்காக கொண்டு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அடுத்ததாக தொகுதி நிர்வாகிகளை ஒன் டூ ஒன் மீட்டிங் நடத்தி ஆலோசனைகளை கேட்டறிந்து வருகிறது. எதிர்கட்சியான அதிமுக தமிழகத்தை காப்போம், மக்களை மீட்போம் என்ற தலைப்பில் பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியாக சென்று தனது பிரச்சாரத்தை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார்.
தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்
இந்த இரு கட்சிகளுக்கும் தேர்தலில் டப் கொடுக்கும் வகையில் களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த விஜய், தனது முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி அசத்தினார். அடுத்ததாக சட்டமன்ற தேர்தலில் மக்களை கவரும் வகையில் ஒவ்வொரு தொகுதிக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த சுற்றுப்பயணம் செப்டம்பர் மாதம் தொடங்கப்படவுள்ளது.
இதற்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடத்த இருப்பதாக அறிவித்தார். அந்த வகையில் இன்று மதுரையில் தவெக இரண்டாம் மாநில மாநாட்டிற்கான மேடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதனையடுத்து எப்போது தவெக மாநாடு நடைபெறும் என தொண்டர்கள் காத்திருந்த நிலையில் இதற்கான அறிவிப்பை விஜய் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,, என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன், வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம் என தெரிவித்துள்ளார்.