
Free cleft lip surgery for children : தமிழக அரசு சார்பாக பல்வேறு மருத்துவ திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகளின் கல்வி, ஊட்டச்சத்து, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை மையமாக கொண்டுள்ளது. மேலும் பிறந்த குழந்தைகளுக்கு உதடு பிளவு என்பது ஒரு பிறவி குறைபாடாக உள்ளது. குழந்தையின் மேல் உதடு அல்லது அண்ணம் முழுமையாக இணையாமல் பிளவு ஏற்படுகிறது. இது குழந்தை பிறப்பதற்கு முன்பே, கருவில் உருவாகும் போது ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளில் எதிர்காலம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் உதடு பிளவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சையானது வழங்கப்பட இருப்பதாக தனியார் அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் கிரெடிட் ஆக்சிஸ் இந்தியா பவுண்டேஷன் நிறுவனம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு தொண்டு செய்யும் நோக்கில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மேல் உதட்டு பிளவுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சைகள் இல்லாமல் வருவதை அறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்கிறது.
இதன் ஒரு பகுதியாக ரோட்டரி சங்கத்துடன் இணைந்து பூந்தமல்லியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையின் உதவியுடன் மேல் உதட்டு பிளவுகளுடன் இருக்கக்கூடிய குழந்தைகளை கண்டறிந்து இந்த மருத்துவமனைக்கு அழைத்து வந்து இலவச அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக முதல் கட்டமாக அந்த நிறுவனம் ரூபாய் 25 லட்சம் நிதியை பல் மருத்துவ கல்லூரியில் வழங்கியுள்ளது.
குழந்தைகளுக்கு உதடு பிளவு தொடர்பான இலவச சிகிச்சைக்கு நிதி வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. ஆக்சிஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி மஞ்சுநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ரோட்டரி மாவட்டம் கவர்னர் தேவேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ரூபாய் 75 லட்சம் நிதி கொடுக்க உள்ளதாகவும் தமிழகத்தில் எந்த பகுதியில் மேல் உதட்டு பிளவுக்காக சிகிச்சை பெற காத்திருக்கும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் பட்டியலை சேகரித்து அவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.