
சேலத்தில் எட்டு வழிச்சாலை அமைந்தால் 8 பேரை கொன்று விட்டு சிறைக்கு செல்வேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசியுள்ளார்.
சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சியில் உள்ள நீர்நிலைகளைப் பார்வையிடுவதற்காக நடிகர் மன்சூர் அலிகான் வந்தார். மூக்கனேரிக்கு வந்த அவர், பரிசலில் சென்று எரியை சுற்றிப் பார்த்தார். இதன் பின்னர், ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டார்.
பிறகு செய்தியாளர்களைச் சநித்த அவர், நான் சேலத்தில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பதைக் கேள்விப்பட்டு அதனைக் காண வந்தேன். கன்னங்குறிச்சி மூக்கனேரியில் தண்ணீர் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
சேலத்தில் விமான நிலையம், எட்டு வழிச்சாலை அமைந்தால் மக்கள் வாழ முடியாது. எட்டு வழிச்சாலை அமைத்தால் ஏராளமான மரங்கள், மலைகள் அழியும். அதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே மத்திய - மாநில அரசுகள் இதனை செயல்படுத்தக் கூடாது என்றார்.
அதற்கான போராட்டங்கள் நடைபெற்றால் அதில் நான் கட்டாயம் கலந்து கொண்டு போராடுவேன். எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசினார். நடிகர் மன்சூர் அலிகானுடன் சமூக ஆர்வலர் பியூஷ்மானுஷ் உடனிருந்தார்.