”தமிழக அரசுக்கு ‘செக்’ வைத்தார் லாரன்ஸ்” – வரும் தேர்தலில் முடிவை சந்திக்க நேரும்…!

First Published Jan 18, 2017, 12:04 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக கல்லூரி மாணவர்களின் அறப்போராட்டம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 250க்கு மேற்பட்டோரை போலீசார் தடியடி நடத்தி கைது செய்தனர். இதை அறிந்ததும், சென்னை மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்களின் அறப்போராட்டத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் டி.ராஜேந்தர் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து கூறி, தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று காலை நடிகர்கள் மன்சூர் அலிகான், ராகவா லாரன்ஸ் ஆகியோர் அறப்போராட்டம் நடத்தும் மாணவர்களை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். பின்னர், ராகவா லாரன்ஸ், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கல்லூரி மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அறிந்ததும், அவர்களை சந்திக்க வந்தேன். எனக்கு ஒரு போன் வந்தது. அதில், குடிக்க தண்ணீர் இல்லை. உணவு இல்லை என கூறினார்கள். அதனால், என்னால் முடிந்தவரை, மாணவர்களுக்கு கொடுப்பதற்காக வந்தேன்.

வங்கியில் பணம் குறிப்பிட்ட அளவுக்குதான் எடுக்க முடியும். இதனால், வங்கிக்கு சென்று, அங்குள்ள அதிகாரியை சந்தித்து, என்னால் முடிந்த வரை, உதவி செய்ய காத்திருக்கிறேன்.

மழை வெள்ள பாதிப்பில் நாம் பலருக்கு உதவி செய்தோம். அதேபோன்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. இதனால், நாம் நிச்சயம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுப்போம். இப்போது, நாம் பாதியளவு ஜெயித்துவிட்டோம். மீதி பாதியையும் ஜெயித்துவிடுவோம். தமிழக அரசு இந்த விஷயத்தில் இனியும் தயக்கம் காட்டாது. அப்படி காட்டினால், வரும் தேர்தலில், இதன் முடிவை கண்டிப்பாக சந்திக்க நேரும். அதனால் நிச்சயம், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, நடிகர் சிவ கார்த்திகேயன், மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். அவர், சக மாணவர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அரசியல் பிரபலங்களை தொடர்ந்து சினிமா நட்சத்திரங்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், அவர்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளனர். இதனால், போராட்டமும் தீவிரம் அடைந்துள்ளது.

click me!