
சேலம் மாவட்டம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை, ஆய்வு செய்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”
தமிழகம் முழுவதும் தடுப்பூசி செலுத்துவதை விரைவுப்படுத்தும் வகையில் 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக கூறினார். நாட்டிலேயே 1 லட்சம் இடங்களில் முகாம் நடைபெறுவது தமிழகத்தில் தான் என்று கூறிய அமைச்சர், தமிழகத்தில் இன்னும் 2 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டிய சூழல் உள்ளது என்றார்.
இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் மட்டும் இன்னும் 1.50 கோடி பேர் உள்ளதாகவும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் 50 லட்சம் பேர் உள்ளதாகவும் தெரிவித்தார். அதனால் தான், தடுப்பூசி செலுத்த 1 லட்சம் இடங்களில் முகாம் நடத்தப்படுகிறது என்று விளக்கினார். மலைப்பகுதியில் பிரேத பரிசோதனை வசதி இல்லததால் உயிரிழப்புகள் மறைக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, சேலம் ஏற்காடு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டது.மேலும் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானம் பெறுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, விரைவில் ரூ.1.05 கோடி மதிப்பில் பிரேத பரிசோதனை அமைக்கவும், உபகரணங்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பேட்டியளித்தார்.
தமிழகத்தில் 18 வயதை தாண்டியவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 92.89 சதவீதமாக உள்ளது. 2 ஆவது தவணை செலுத்தியவர்களின் எண்ணிக்கை 79.39 சதவீதமாக உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்களை கண்டறிந்து, தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலைநாட்டு உணவான ஷவர்மாவில் நாள்பட்ட இறைச்சி, சரியான உணவுப்பதப்படுத்துதல் இல்லை என்றால் அனைவருக்கும் உடல்நலம் பாதிக்கும். போதிய பதப்படுத்துதல் இல்லாமல் ஷவர்மா விற்பனை தற்போது தொடங்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாபாரத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு ஷவர்மா விற்பனை செய்யப்படுகிறது. எனவே இதுக்குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் போதிய குளிர்சாதன வசதி உள்ளதா என்பது ஆயிரம் கடைகளில் ஆய்வ செய்யப்பட்டதாகவும் கூறினார். போதிய பாதுகாப்பு வசதி இல்லாமல் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ரூ.180.45 கோடியில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்க முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் சேலம் மாவட்டத்தில் 32 புதிய நகர்ப்புற மருத்துவமனைகள், நகராட்சிகளில் 6 மருத்துவமனைகள் வர உள்ளன. சந்தை, குடிசை பகுதிகள், மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் இந்த மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.
மேலும் படிக்க: Asani: இன்று உருவாகிறது அசானி புயல்.. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ?