புதிய சாராயக் கடைகள் திறப்பதை கைவிடுங்க - அரசுக்கு டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை...

First Published Jul 7, 2017, 6:31 AM IST
Highlights
abandon new liquor stores tasmac staffs demand to government


திருவள்ளூர்

“புதிய சாராயக் கடைகள் திறக்கும் நடவடிக்கையை கைவிட்டு ஏற்கனவே செயல்படும் கடைகளின் எண்ணிக்கையை இறுதிப்படுத்தி தேவையான ஊழியர்கள், உபரி ஊழியர்கள் என வகைப்படுத்த வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி திருவள்ளூரில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூரை அடுத்த காக்களூரில் உள்ள மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டு நடவடிக்கை குழுவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் நித்யானந்தம், டாஸ்மாக் பணியாளர் சங்க திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் சந்திரன், மாவட்டத் தலைவர் கேசவன், மாவட்டப் பொருளாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், “டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு மாற்றுப் பணியிடம் வழங்க வேண்டும்,

புதிய சாராயக் கடைகள் திறக்கும் நடவடிக்கையை கைவிட்டு ஏற்கனவே செயல்படும் கடைகளின் எண்ணிக்கையை இறுதிப்படுத்தி தேவையான ஊழியர்கள், உபரி ஊழியர்கள் என வகைப்படுத்த வேண்டும்,

அனைவருக்கும் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,

உபரி ஊழியர்களுக்கு கல்வித் தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் அரசு துறைகளில் பணி வழங்க வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான டாஸ்மாக் பணியாளர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற 11-ஆம் தேதி சென்னை அண்ணாசாலையில் உள்ள டாஸ்மாக் முதுநிலை மண்டல அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் அறிவித்தனர். 

click me!