ஆவின் பொருட்கள் கடும் விலை உயர்வு !! நாளை மறுநாள் முதல் அமல் !!

By Selvanayagam PFirst Published Sep 16, 2019, 8:17 AM IST
Highlights

ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதையடுத்து நெய், வெண்ணெய், பால்பவுடர், தயிர் உள்பட ‘ஆவின்’ பால் பொருட்களின் விலை உயருகிறது. இந்த விலை உயர்வு  நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது.

பால் கொள்முதல் விலை உயர்வு காரணமாக ‘ஆவின்’ பால் விற்பனை விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு  கடந்த மாதம் 19-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

‘ஆவின்’ மையங்களில் பாலை தவிர மோர், தயிர், வெண்ணெய், நெய், லஸ்சி, பனீர், யோகர்ட், பாதாம் பவுடர், உலர் பழ கலவை, குலாப் ஜாமுன் மிக்ஸ், பால் பவுடர், ஐஸ் கிரீம்கள், சாக்லெட்கள், குலாப் ஜாமுன், பால்கோவா, பால்பேடா, மைசூர்பாகு, ரசகுல்லா, டீ-காபி, பேவர்டு மில்க், மில்க்ஷேக், வே டிரிங் போன்ற பலவகையான பால் சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, ஆவினின் உப பொருட்களின் விலையும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக ‘ஆவின்’ உயர் அதிகாரிகள் இரு கட்டங்களாக கூட்டங்கள் நடத்தி எந்தெந்த பொருட்களின் விலையை உயர்த்தலாம்? என்பது குறித்து ஆலோசித்தனர். 

இதில் முதற்கட்டமாக சில உப பொருட்களின் விலையை மட்டும் உயர்த்த முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி நெய், பால்பவுடர், பனீர், வெண்ணெய், பால்கோவா, தயிர், டிலைட் பால் மற்றும் பேவர்டு மில்க் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. 

இந்த உப பொருட்களின் விலை ஏற்றம் நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது என்று ‘ஆவின்’ நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்தவகையில் நெய் விலை லிட்டருக்கு ரூ.35 உயர்த்தப்பட்டு இருக்கிறது. பால் பவுடர் மற்றும் பனீரின் விலை கிலோவுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளது. 

வெண்ணெய் விலை ½ கிலோவுக்கு ரூ.10-ம், பால்கோவா விலை கிலோவுக்கு ரூ.20-ம், டிலைட் பாலின் விலை ½ லிட்டருக்கு ரூ.4-ம், ஃபிளேவர்டு மில்க்கின் விலையில் ரூ.3-ம், தயிர் விலையில் ரூ.2-ம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

click me!