
திருட்டு வழக்கில் போலீசார் கைது செய்து விசாரித்ததால், வாலிபர் லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் கொருக்குப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். சாலைகளில் சிமெண்ட் கலவை போடும் வேலை பார்க்கிறார். இவரது மகன் மணிகண்டன் (18). வேலை செய்யாமல் ஊர் சுற்றி வந்தார்.
மகன் வேலைக்கு செல்லாமல் இருப்பதை தந்தை தட்டிக் கேட்பார் இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படும்.
இந்நிலையில், இன்று காலை தேவராஜ் கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில், சாலை அமைக்கும் பணிக்கு புறப்பட்டார். அப்போது, ஊரை சுற்றிக் கொண்டு இருக்காமல் தன்னுடன் வேலை செய்யும்படி மகனையும் அழைத்து வந்துள்ளார்.
ஆனால், வந்த இடத்தில் மணிகண்டன் வேலை எதையும் செய்யவில்லை. அந்த பகுதி முழுவதும் சுற்றி வந்துள்ளார்.
அப்போது, மாதவரத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் அங்குள்ள கடைக்கு தனது பைக்கில் வந்தார். பைக்கை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, பொருட்கள் வாங்க சென்றார். சாவியை வண்டியிலேயே வைத்துவிட்டார்.
இதை பார்த்த மணிகண்டன், யாருக்கும் தெரியாமல் பைக்கை எடுத்து கொண்டு புறப்பட்டார். வண்டியின் சத்தம் கேட்டு வேல்முருகன் கூச்சலிட்டார். அதற்குள் பைக் மாயமானது. உடனே, அங்கிருந்த சிலருடன் பைக்கை விரட்டி சென்று, கொடுங்கையூர் அருகே மடக்கி பிடித்தனர்.
அங்கு பைக்கை திருடி சென்ற மணிகண்டனை சுற்றி வளைத்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள், ஆர்கே நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரித்தபோது, சிறிய வயது வாலிபர் என்பதால், வழக்குப்பதிவு செய்ய வேண்டாம். எச்சரித்து அனுப்பும்படி வேல்முருகன் கேட்டு கொண்டார்.
இதற்கிடையில் மகனை போலீசார் பிடித்து வைத்திருந்ததை அறிந்ததும், தேவராஜ் காவல்நிலையம் வந்தார். இதையடுத்து, போலீசார் இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என எழுதி வாங்கி கொண்டு தந்தையுடன் அனுப்பி வைத்தார்.
காவல் நிலையத்தில் இருந்து தந்தையுடன் வெளியே வந்தபோது, அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் இருந்து டீசல் நிரப்பி கொண்டு ஒரு லாரி வெளியே வந்தது.
உடனே மணிகண்டன், காவல் நிலையத்துக்கு தந்தை வந்ததால் அவமானம் அடைந்து, அந்த லாரியின் பின் சக்கரத்தின் கீழ் பாய்ந்து படுத்து கொண்டார். இதில், அவர் மீது சக்கரம் ஏறியதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து, ரத்த வெள்ளத்தில் இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உடனடியாக போலீசார், சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.