
காஞ்சிபுரத்திற்கு வந்த குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி சங்கராட்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதையடுத்து, அந்த பதவிக்கு ஜூலை 17 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பாளர் அறிவிப்பை விரைவில் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளியிடுகின்றன.
இந்நிலையில், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று ஒரு நாள் சுற்றுப்பயணமாக காஞ்சிபுரம் வந்தார்.
புது டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11 மணிக்கு புறப்பட்ட அவர் பகல் 1.45 மணிக்கு அரக்கோணம் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்திற்கு வந்தார்.
அங்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுகொண்ட அவர் சாலை மார்க்கமாக காஞ்சிபுரம் சென்றார். பிற்பகல்2.20 மணிக்கு காமாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்தார்.
இதைதொடர்ந்து காஞ்சி சங்கரமடத்திற்கு பிற்பகல் 3 மணிக்கு வந்தடைத்தார். அங்கு சங்கராட்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோரை சந்தித்து பிரணாப் ஆசி பெற்றார்.
இதையடுத்து மீண்டும் சாலை மார்க்கமாக அரக்கோணம் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்திற்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்ப உள்ளார்.