
Sub-Inspector Arrested For Youth Honour Killing: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் (27) ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது கவின் திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு பெண் மருத்துவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அப்பெண்ணின் பெற்றோர் இருவரும் காவல் துறையில் சப் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வந்தனர்.
ஆணவக் கொலை
இருவரின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டுக்கு தெரிந்து அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த பெண்ணின் சகோதரரின் சுர்ஜித் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐடி ஊழியர் கவினை வெட்டி படுகொலை செய்தார். கொலையாளி சுர்ஜித் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த கொலைக்கு சுர்ஜித்தின் பெற்றோரும் தூண்டுதலாக இருந்ததாக கவினின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
சுர்ஜித்தின் தந்தையான சப் இன்ஸ்பெக்டர் கைது
இதனால் அவர்கள் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆனாலும் இருவரையும் கைது செய்ய வேண்டும் என கவினின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கவினின் உடலை வாங்க மறுத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லை. இந்நிலையில், சுர்ஜித்தின் தந்தையான சப் இன்ஸ்பெக்டர் சரவணனை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர் போராட்டம் காரணமாக வேறு வழியின்றி போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
கவினின் குடும்பத்தினர் கோரிக்கை
கைது செய்யப்பட்ட சரவணன் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதேபோல் தனது மகனின் சாவுக்கு துணைபோன சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என கவினின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கை தமிழ்நாடு அரசு சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.