ஆசிரியர்கள் எங்கே போனார்கள் ? தனி ஒருவனாய் சாலை மறியலில் ஈடுபட்ட தந்தை !!

By Selvanayagam PFirst Published Jan 26, 2019, 8:06 AM IST
Highlights

வால்பாறையில் ஆசிரியர்கள் போராட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து குழந்தைகளுடன் ஒருவர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்ட்டது

கோவை மாவட்டம் வால்பாறை கக்கன்காலனி பகுதியில் குடியிருந்து வருபவர் அப்துல்அஜீஸ் .  பேக்கரி உரிமையாளர். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவரும் வால்பாறை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்துல்அஜீஸ் நேற்று காலை தனது குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்றார்.

தற்போது  9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த பள்ளிக்கு ஆசிரியர்கள் வரவில்லை. இதையடுத்து அப்துல் அஜிஸ், வால்பாறை காந்திசிலை பஸ் நிறுத்தம் அருகே வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் தனது மகன் மற்றும் மகளுடன் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டார்.

அப்போது அவர் ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனால் தனது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார். சாலை மறியல் காரணமாக அந்த சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த வால்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பின்னர் சாலைமறியலில் ஈடுபட்ட அப்துல்அஜீசை சமாதானம் செய்து அங்கிருந்து போலீஸ் நிலையத் திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் போராட்டம் நடத்துவதால் பள்ளிக்கு வருவதில்லை.

இதன் காரணமாக குழந்தைகளின் படிப்பு முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 3-வது நாளாக குழந்தைகளுக்கு பாடம் எதுவும் சொல்லி கொடுக்கவில்லை. வேறு ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

பின்னர் அவரிடம் போலீசார் எழுதி வாங்கிக்கொண்டு, அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சாலை மறியல் காரணமாக வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் அரை  மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

click me!