கர்நாடகவில் இருந்து சென்னைக்கு இளநீர் ஏற்றி வந்த மினி லாரியை மர்ம கும்பல் திருடிய நிலையில், லாரி திருடப்பட்ட ஒன்றரை மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இளநீர் லாரி திருட்டு
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வீடுகளுக்குள் மக்கள் முடங்கி கிடக்கின்றனர். வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள இளநீர் போன்ற இயற்கை பானங்களை மக்கள் குடித்து வருகின்றனர். இதன் காரணமாக இளநீர் விலையும் உச்சத்தை அடைந்துள்ளது. இதனை பயன்படுத்திய மர்ம கும்பல் இளநீர் கொண்டு வந்த லோடு லாரியை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
undefined
கர்நாடகவை சேர்ந்த ஜெகதீஷ் (45) என்ற வாகன ஓட்டுநர் கர்நாடகாவில் இருந்து இளநீர் லோடு எடுத்துக்கொண்டு கடந்த 23ஆம் தேதி சென்னை வந்தவர் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சப்ளை செய்துவிட்டு நேற்று இரவு கோயம்பேடு 100 அடி சாலையில் நிறுத்திவிட்டு சாவியை லோடு லாரியில் வைத்துவிட்டு டீ குடிக்க சென்றுள்ளார். டீ குடித்துவிட்டு வாகன ஓட்டுனர் ஜெகதீஷ் திரும்ப வந்து பார்த்தபோது தனது லோடு லாரி திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஒன்றரை மணி நேரத்தில் இளநீர் திருட்டு
இது குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க, போலீசார் உடனடியாக வாக்கி டாக்கி மூலம் இரவு பணி காவலர்கள் அலெர்ட் செய்தனர்.இந்த நிலையில் கொரட்டூர் அல்லியன்ஸ் அப்பார்ட்மெண்ட் அருகே வாகன சோதனையில் திருடப்பட்ட வாகனம் அடையாளம் கண்டு கொரட்டூர் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், வாகனத்தை திருடி வந்த நபரையும் கைது செய்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து லாரியை பறிமுதல் செய்து திருடனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்ட போது நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த அருள் முத்து( 38) என்பது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட அருள் முத்துவிடம் கோயம்பேடு போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.