
அரசு மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் பெண் மரணம்..! கலங்க வைக்கும் சம்பவம்..!
அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உடையார்பாளையத்தைச் சேர்ந்த சாந்தி என்ற பெண் கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்துவந்துள்ளார். உடையார் பாளையம் அரசு மருத்துவமனையில் சாந்தி சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல்நலம் சரியான நிலையில் அவர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், சாந்திக்கு நேற்றிரவு மீண்டும் உடல்நலம் குன்றியதால், இன்று காலை உடையார் பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அப்போது மருத்துவர்கள் யாரும் மருத்துவமனையில் இல்லை. ஒரு ஊழியர் மட்டுமே இருந்துள்ளார். அவரிடம் கேட்டதற்கு, இன்னும் ஒரு மணிநேரத்தில் மருத்துவர் வந்துவிடுவார் என தெரிவித்துள்ளார்.
அதுவரை சாந்தியை வைத்துக்கொண்டு உறவினர்கள் காத்திருந்துள்ளனர். சிறிதுநேரம் கழித்து வந்த மருத்துவர், சாந்தியை பரிசோதித்துவிட்டு அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சாந்தியின் உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
மருத்துவர் இல்லாததாலேயே சாந்தி இறந்ததாகக் குற்றம்சாட்டுகின்றனர். சாந்தியை அழைத்து வந்தபோதே மருத்துவர் இருந்து சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் எனவும் சாந்தியின் உறவினர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சமாதானமாகாத உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அரசு மருத்துவமனையில் பணியில் மருத்துவர் இல்லாததால் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது