
கில்லாடி கிரிமினல்தனங்களை சினிமாதான் கற்றுத்தருகிறதா அல்லது நடைமுறையில் இருந்து எடுக்கப்படும் உண்மைகளை சினிமா ஊதி பெரிதாக்குகிறதா என்று புரியவில்லை.
மதுரையில் கஞ்சா கடத்திய ஸ்லீப்பர் செல் சிக்கிய விதமும், அந்த நெட் ஒர்க்கின் ஒர்க்கிங் ஸ்டைலும் காமெடியும், களேபரமும் கலந்த சினிமாத்தனம்தான்...
திண்டுக்கல் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸின் பெண் இன்ஸ்பெக்டர் ஹவுசர் நிஷா. நேற்று மதுரை ஐகோர்ட் கிளைக்கு பணி நிமித்தமாக சென்றுவிட்டு திண்டுக்கல் செல்வதற்காக ஆரப்பாளையத்தில் உள்ள பேருந்தில் அமர்ந்திருந்தார். யூனிஃபார்மில் இல்லாமல் சிவில் உடையில் இருந்திருக்கிறார்.
பஸ் கிளம்பி சென்று கொண்டிருந்தது. அப்போது வழியில் ஒரு பையுடன் ஏறிய ஒருவன் பெண் இன்ஸ்பெக்டர் என்று அறியாமல் நிஷாவின் காலருகே ஒரு பையை வைத்துவிட்டு அடுத்த சீட்டில் அமர்ந்திருக்கிறான். போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் பணி புரிவதால் அந்த பையிலிருந்து வந்த வித்தியாசமான வாசனையை வைத்து அதில் கஞ்சா இருப்பதை புரிந்து கொண்டார். உடனே திண்டுக்கல்லில் இருக்கும் போலீஸுக்கு மொபைலில் தகவல் கொடுத்தார்.
ஒரு டீம் போலீஸார் திண்டுக்கல்லில் நம்ம மதுரை மாப்பிள்ளையை வரவேற்க ரெடியாய் நின்றனர். திண்டுக்கல்லுக்குள் பேருந்து நுழைந்து, யானை தெப்பம் பஸ் ஸ்டாப் வந்ததும், மதுர மாப்ள சட்டென்று அந்த பையை எடுத்துக் கொண்டு கீழே இறங்க, பெண் இன்ஸ்பெக்டர் சமிஞை கொடுக்க, பாய்ந்து வந்த போலீஸ் அவனை அமுக்கிவிட்டனர்.
அப்புறமாக மாமியார் வீட்டுக்கு கூட்டிட்டு போயி முறைவாசல் செய்து விசாரித்ததில் பொளபொளவென உண்மையை கக்கியிருக்கிறான். அவன் பெயர் மதியழகன். மதுரை செல்லூர்தான் சொந்த ஊராம். பையில் 25 கிலோ கஞ்சாவை எடுத்துக் கொண்டு திண்டுக்கல் வந்ததாக சொல்லியிருக்கிறான்.
அவனுக்கு மேலும் சீர் வரிசை செய்த போது கொட்டிய தகவல்கள் போலீஸை அப்படியே ஷாக்காக வைத்திருக்கின்றன.
மதியழகன் அப்படி என்னதான் சொன்னான்...
“சார் பொசுக்கு பொசுக்குன்னு கை நீட்டாதீக. நான் உண்மைய சொல்லிடுதேம். இந்த கஞ்சா ஆந்திராவுல இருந்து வருது. ரெகுலரா வாரத்துக்கு ரெண்டு மூணு தடவ வரும். ஆந்திராவுல இருந்து யார் கொண்டாரங்கன்னு எனக்கு தெரியாது. ஆனா இந்த ஃபீல்டுல இருக்கிற என் நண்பேன் எனக்கு போன் பண்ணுவான். நான் மதுர மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுக்கு போவேன், அங்கே ஒரு பூக்கட முன்னாடி இந்த பை இருக்கும். அத எடுத்துகிட்டு ஆரப்பாளையம் வந்து, திண்டுக்கல் பஸ் பிடிச்சு இங்க வருவேம்.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டுல ஒரு பூக்கடை முன்னாடி இத வைக்க சொல்லுவாங்க. நானும் வெச்சிடுவேம். அப்புறம் ஒருத்தன் வந்து தூக்கிட்டு போயிடுவாம். எல்லா ஊர்லேயும் இப்டி பூக்கடைகள் முன்னாடிதான் வெப்போம். ஆனா வைக்கிற எனக்கும், இதை எடுக்கிறவனுக்கும் எந்த பேச்சும் இருக்க கூடாது. மீறி பேசினா பிஸ்னஸ (பெரிய சாஃப்ட்வேர் பிஸ்னஸ்) விட்டு தூக்கிடுவாங்க. யாரும் யாரையும் நேர்ல பார்த்துக்க மாட்டோம். போன்லதான் பேசிப்போம்.
மாட்டுத்தாவணி டூ திண்டுக்கல் என்னோட வேலை கரெக்டா முடிஞ்சதும் நான் என்னோட நண்பேனுக்கு சொல்லிடுவேம். மாசத்துக்கு பத்து நாளாச்சும் டூட்டி (க்க்க்கும்) இருக்கும். இதுல ஒரே கண்டிஷனே கூட ஒர்க் பண்றவங்க கூட பழக்கம் வெச்சுக்க கூடாதுங்கிறதுதான். டீஸண்டா வேல பார்த்தா மாசா மாசம் சம்பளம் கரெக்டா கைக்கு வந்துடும். அதையும் என் நண்பேந்தான் கொடுப்பாம். அவனுக்கு கீழ என்னை மாதிரி நிறைய பேரு ஒர்க் பண்றாங்க.
ஆந்திராவுல இருந்து யார் இத கொண்டாறாங்கன்னு தெரியாது. இது திண்டுக்கல்ல இருந்து யார் மூலமா எங்கே போதும்னும் தெரியாது. ஆனா நாங்க பையை எடுக்கிறதும், வைக்கிறதும் அந்த அந்த ஊரோட பஸ் ஸ்டாண்டுல இருக்கிற பழக்கடைகள், பூக்கடைகள் முன்னாடிதான்.
அம்புட்டுதேன் எனக்கு தெரியும்.” என்று முடித்தவன், போலீஸிடம் ‘சார், அந்த பையில இருக்குறது கஞ்சான்னு கரெக்டா அந்த பொம்பள கண்டுபிடிச்சது எப்டின்னு கொஞ்சம் விசாரிங்க.” என்று அப்பவும் அது பெண் இன்ஸ்பெக்டர் என்று தெரியாமல் பேசியிருக்கிறான் மதியழகன். உடனே ரை ரை ரை...என்று நாலு ரவுண்டு அறைந்து ‘அது லேடி இன்ஸ்பெக்டர்டா மூதேவி!’ என்றதும் மதியழகனுக்கு மயக்கமே வந்திருக்கிறது.
மதியழகனை ஜெயிலுக்கு பார்சல் கட்டி அனுப்பிய காவல்துறை, ஏதோ பாகிஸ்தான் தீவிரவாதிகளால் இயக்கப்படும் ஸ்லீப்பர் செல்கள் போல் கஞ்சா விற்பனையிலும் இப்படி ஸ்லீப்பர் செல்கள் பயன்படுத்தப்படுவதை கண்டு கடுப்பாகி இருக்கிறது.
மதியழகனுக்கு பின்னால் இருக்கும் நபரை கண்டுபிடித்து, அவர் மூலமாக அடுத்தடுத்த கஞ்சா விற்பனை பேர்வழிகளை மடக்கும் மூவ்களில் இறங்கியிருக்கிறது.
அதற்கெல்லாம் முன்பாக மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் முக்கிய ஊர் பஸ் ஸ்டாண்டுகளில் உள்ள பூக்கடை மற்றும் பழக்கடைகளை தங்களின் விரிவான விசாரணையின் கீழ் கொண்டு வந்திருக்கிறார்கள். கஞ்சா பையை வைக்க இடம் கொடுப்பதால் பூக்கடைகளுக்கு கஞ்சா டீம் ஏதேனும் கமிஷன் கொடுக்கிறதா என்றும் விசாரிக்கிறார்கள்.
கஞ்சா அடிக்காமலே தலை சுற்றுகிறதா!...