அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி, ருசியான புதிய உணவுகளை வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில், சுமார் ரூ.5 கோடி செலவில் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏழை மக்களுக்கான அம்மா உணவகம்
ஏழை மக்களுக்கு, மலிவு விலையில் தரமான உணவு வழங்க, அதிமுக ஆட்சி காலத்தின் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 2013ஆம் ஆண்டு அம்மா' உணவகங்கள் துவங்கினார். சென்னை மாநகராட்சியில், அரசு பொது மருத்துவமனை உட்பட, வார்டுக்கு ஒன்று வீதம், 207 உணவகங்கள் திறக்கப்பட்டன. பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்ததால், 2016ம் ஆண்டு, வார்டுக்கு இரண்டு வீதம், 407 உணவகங்களாக அதிகரிக்கப்பட்டது. பொது மக்களிடம் வரவேற்பு அதிகரித்ததால் 2016ம் ஆண்டு வார்டுக்கு இரண்டு வீதம், 407 உணவகங்களாக அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து புதிய அம்மா உணவகங்கள் திறக்கும் பணி நிறுத்தப்பட்டது.
பராமரிப்பின்றி அம்மா உணவகம்
மேலும் நீதிமன்ற வழக்கு, மெட்ரோ ரயில் பணி உள்ளிட்ட காரணங்களால் 16 உணவகங்கள் மூடப்பட்டன. தற்போது, 391 உணவகங்கள் கடந்த 11 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகின்றன. இங்கு, இட்லி ஒரு ரூபாய், பொங்கல், சாம்பார், லெமன், கருவேப்பிலை சாதம் தலா 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய், 2 சப்பாத்தி 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்த விலையில் கிடைப்பதால், கூலி தொழிலாளர்களும், ஏழை மக்களும் பெரிதும் பயனடைகின்றனர். அம்மா உணவகத்தில் குறைந்த விலைக்கு உணவுகளை வழங்குவதால் ஆண்டுக்கு 140 கோடி ரூபாய் செலவாகிறது. ஆண்டுதோறும், 120 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்திருந்தது. மேலும் அம்மா உணவகத்தில் உணவகத்தின் சுவை ஒரே விதமாக இருப்பதால், சாப்பிடும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது.
சீரமைக்க நிதி ஒதுக்கீடு
எனவே அம்மா உணவகம் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதற்கு அதிமுக தரப்பு கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது. அம்மா உணவகம் சீரமைக்கப்படவில்லையென புகார் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் அம்மா உணவகத்தை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளாயியுள்ளது. அந்த வகையில், சாப்பாட்டின் வகைகளை மாற்றி, ருசியாக வழங்கினால், விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் ரூ.5 கோடி செலவில் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து அம்மா உணவகங்களின் கட்டடங்களை சீரமைத்து, வண்ணம் பூசி புதுப்பொலிவுடன் மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், உணவகங்களின் சமையலறையில் பிரிஜ், கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட பழுதடைந்த இயந்திரங்கள், சமையலறை பொருட்களை மாற்றவும், மண்டல அதிகாரிகளுக்கு, மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. வரும் காலங்களில், அம்மா உணவகம் தொடர்பாக புகார் வந்து, மாநகராட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும் போது, அம்மா உணவகங்களை மூடும் எண்ணம் இல்லை.
அம்மா உணவகம் மூடும் எண்ணமில்லை
அம்மா உணவகங்கள் பல, மோசமான நிலையில் உள்ளன. குடிநீர் வருவதில்லை, கூரை சேதம், சமையல் பொருட்கள் பழுது போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தன. இதனால், அனைத்து அம்மா உணவகங்களையும் சீரமைத்து புதுப்பொலிவுடன் மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பயனாளிகளின் வருகையை அதிகரிக்க, ருசியான புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடக்கிறது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.