கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.10 ஆயிரம் கடனுக்காக வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை திருடிச் சென்ற பாஜக பிரமுகரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள கொத்தனார்விளை பகுதியைச் சேர்ந்தவர் குமார். 37 வயதான இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் உடல் நலம் சரியில்லாமல் ஆட்டோ ஓட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மனைவி சுனிதா சுய உதவி குழு மூலமாக வங்கி கடன் பெற்று சொந்தமாக ஆட்டோ ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி குமார் தனது வீட்டின் முன் ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்த நிலையில் அது மாயமாகியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குமார் மற்றும் அவரது மனைவி சுனிதா குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் திருட்டு வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மர்ம நபர் ஒருவர் வீட்டின் முன் நிறுத்தி இருந்த ஆட்டோவை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
அமித் ஷா கண்டித்தாரா? வைரல் வீடியோ சர்ச்சைக்கு தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம்
அடுத்தடுத்த விசாரணையில் ஆட்டோவை திருடி சென்றது குறும்பனை பகுதி பாஜக மாவட்ட மீனவரணியை சேர்ந்த டிக்சன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து டிக்சனை கைது செய்த குளச்சல் காவல் துறையினர் ஆட்டோவை பறிமுதல் செய்ததோடு குளச்சல் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
வீசாரணையில் ஆட்டோ உரிமையாளர் குமார் மற்றும் அவரது மனைவி சுனிதா பெண் ஒருவரிடம் கடனாக பெற்ற 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்காததால் அதை ஈடுகட்ட பெண்ணுக்கு ஆதரவாக டிக்சன் ஆட்டோவை அதிகாலை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து குளச்சல் போலீசார் டிக்சனை திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.