கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே கட்டிட தொழிலாளியின் தொண்டையில் புரோட்டா சிக்கி அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள சாங்கையைச் சேர்ந்தவர் சனந்தனன். கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 1 மனைவியும், ஒரு மகளும் இருந்தனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் சனந்தனன் தனது தாய் மேரிபாயுடன் சாங்கையில் வசித்து வந்தார்.
இதனிடையே நேற்று சனந்தனன் உணவகத்தில் இருந்து புரோட்டா வாங்கி வந்தார். அதனை வீட்டில் அமர்ந்து சாப்பிட்டு கொண் டிருந்தார். அப்போது புரோட்டா தொண்டையில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அவருக்கு விக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் தாயிடம் தண்ணீர் கேட்டுள்ளார். உடனே தாயார் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
அதை வாங்கி குடித்து கொண்டிருந்த போது திடீரென சனந்தனன் கீழே விழுந்துள்ளார். இதைபார்த்த தாயார் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் சனந்தனனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மார்த்தாண்டம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புரோட்டா தொண்டையில் சிக்கி கொத்தனார் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.