கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு அளிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பிலும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சுவாமி விவேகானந்தர் பாரத மாதாவை தரிசனம் செய்த இடம் கன்னியாகுமரி ஆகும். இவ்வளவு பிரசித்தி பெற்ற சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த அதே இடத்தில் பிரதமர் மோடி, 2 நாட்கள் தங்கியிருந்து கடலில் உள்ள விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் தியானம் செய்ய உள்ளார்.
தேர்தல் பிரச்சாரங்களின் முடிவில் இந்த ஆன்மீக பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மே 30 ஆம் தேதி கன்னியாகுமரி வந்து ஜூன் 1-ம் தேதி வரை தங்குகிறார். டெல்லியிலிருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு நாளை பிற்பகல் 3.55 மணிக்கு விமானத்தில் வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் வழியே கன்னியாகுமரிக்கு வருகிறாா்.
undefined
பிறகு அங்குள்ள அரசு விருந்தினா் மாளிகையில் தரையிறங்கும் பிரதமர் மோடி, கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தா் பாறைக்கு தனிப் படகில் செல்கிறாா். பிறகு விவேகானந்தா் நினைவு மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் சனிக்கிழமை அதாவது ஜூன் 1 பிற்பகல் வரை தொடா்ந்து தியானத்தில் ஈடுபடவுள்ளாா் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேர காலத்தில் பிரதமர் மோடி மறைமுகமாக பிரசாரம் செய்ய முயற்சிக்கிறார். கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் மனு அளித்துள்ளது.
கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்யக் கோரி அம்மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளபோது விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் விதிமீறல் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் நடத்தை விதிமீறல். இதன் மூலம் பிரதமர் மோடி மறைமுகமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல காங்கிரஸ் சார்பில் டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி, “48 மணி நேர மௌன காலத்தில், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ யாரையும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.