பூண்டி ஏரியில் இருந்து 10ஆயிரம் கன அடி நீர் திறப்பு.! கொசஸ்தலை ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

By Ajmal KhanFirst Published Dec 11, 2022, 9:17 AM IST
Highlights

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக 10,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றின் கரையோரத்தில் உள்ள 80 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

கன மழை- நீர்வரத்து அதிகரிப்பு

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 70கிலோ மீட்டர் வேகத்தில் காற்றானது வீசியது. இதன் காரணமாக 5 பேர் உயிரிழந்த நிலையில், 400க்கும் மேற்பட்ட மரங்கள் சென்னையில்சேதமடைந்தது. மேலும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதன் காரணமாக நீர் பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதே போல புயலின் தாக்கத்தால் ஆந்திர மாநிலத்தில் பிச்சாட்டூர் அணை மற்றும் அம்மம்பள்ளி அணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அந்த அணையில் இருந்து தண்ணீரானது திறக்கப்பட்டுள்ளது.

10,000 கன அடிநீர் திறப்பு

ஆந்திராவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் பூண்டி அணைக்கு வந்து கொண்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில் முக்கிய அணையாக  பூண்டி அணை உள்ளது, 35 அடி கொள்ளளவு கொண்ட பூண்டி அணை தற்போது 33.5அடியாக உள்ளது.  இன்று மாலைக்குள் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நேற்று 5ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நீர் வரத்து 12 ஆயிரம் கன அடியாக இருப்பதால் 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. 8 மதகுகள் வழியாக தண்ணீரானது திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த தண்ணீரானது கொசஸ்தலை ஆறு வழியாக எண்ணூர் கடலுக்கு செல்கிறது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆறு வழிப்பாதையில் உள்ள 80க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மாண்டஸ் புயலில் இருந்து மக்களை காப்பாற்றிய சென்னை மாநகராட்சிக்கு நன்றி.. ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள் !!

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பூண்டி அணையில் இருந்து திறக்கப்படும் நீரானது 300 கிலோ மீட்டர் வேகத்தில் செல்கிறது. இதன் காரணமாக கொசஸ்தலை ஆற்றின் பொதுமக்கள் வேடிக்கை பார்க்கவோ செல்பி எடுக்கவோ கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெள்ள அபாயம் இருப்பதால் கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

தொடர்ந்து நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..! 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

click me!