காவலாளர்களை தாக்கி வன்முறையில் ஈடுபட்ட 92 பேர் கைது…

First Published Dec 20, 2016, 10:30 AM IST
Highlights


இளம்பிள்ளை அருகே காவலாளர்கள் வாகனச் சோதனையின்போது இளைஞர் விபத்தில் இறந்ததால், காவலாளர்களைத் தாக்கி வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக 92 பேர் காவலாளர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இளம்பிள்ளை, கோனேரிப்பட்டியைச் சேர்ந்த தறித் தொழிலாளி தங்கராஜ் மகன் சரவணக்குமார் (22). சனிக்கிழமை இளம்பிள்ளைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற இவர், காவலாளரின் வாகனச் சோதனையிலிருந்து தப்பிக்க இருசக்கர வாகனத்தைத் திருப்பினார். அப்போது ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த மினி லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவலறிந்ததும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு, சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மினி லாரி, காவலாளரின் வாகனங்கள், அவசர ஊர்திகளை சேதப்படுத்தியதுடன், காவலாளரையும் தாக்கினர்.

இதில், இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன் உள்பட 11 காவலர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து மகுடஞ்சாவடி காவலாலர்கள் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில், கட்செவி அஞ்சல், காவல் துறை சார்பில் எடுக்கப்பட்ட விடியோ, புகைப்படங்கள், தொலைக்காட்சி, பத்திரிகைகளில் வந்த புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அந்த கலவரத்தில் ஈடுபட்டதாக 92 பேரை நேற்று கைது செய்து, சங்ககிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்து, சேலம் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரைத் தீவிரமாக காவலாளர்கள் தேடி வருகின்றனர்.

click me!