கருகிய பயிர்களுடன் ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்…

Asianet News Tamil  
Published : Dec 20, 2016, 09:13 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
கருகிய பயிர்களுடன் ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்…

சுருக்கம்

தூத்துக்குடி,

செக்காரக்குடிப் பகுதியை வறட்சிப் பகுதியாக அறிவித்து எங்களுக்கு நிவாரண உதவி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ரவிகுமாரிடம் விவசாயிகள் கருகிய பயிர்களுடன் கோரிக்கை மனு அளித்தனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தலைமையில், ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பொது மக்களிடம் இருந்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.

அப்போது தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் நயினார் குலசேகரன் தலைமையில் மனு ஒன்று அளிக்கப்பட்டது.

அதில், “திருவைகுண்டம் அணையில் தூர்வாரப்பட்ட இடங்களில், தற்போது கொங்கராயன்குறிச்சி ஆற்றுப் பகுதியில் இருந்த மணல் மற்றும் அமலை செடிகள் அனைத்தும் தண்ணீரில் அடித்துவரப்பட்டு தேங்கிக் கிடக்கின்றன.

இதனால் அணை தூர்வாரியும் பயனில்லாமல் இருக்கிறது. இதனை சரிசெய்ய, கொங்கராயன்குறிச்சியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு மனு ஒன்றை கொடுத்தார். அதில், “மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி பாசன குளங்கள், மானாவாரி குளங்கள், கால்நடைகளின் மேய்ச்சல் நிலங்களில் படர்ந்து இருக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பருவமழை பொய்த்ததால் கடும் வறட்சி நிலவுகிறது. எனவே, தூத்துக்குடியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதுடன், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.

விளாத்திகுளம் பகுதிகளில் சரள் மணல் அள்ள அனுமதி பெற்றுவிட்டு, வைப்பாற்று மணல் முறைகேடாக அள்ளப்பட்டு வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே திட்டமிட்டப்படி கிழக்கு கடற்கரை சாலை அமைக்கும் திட்டத்தை, புன்னக்காயல், காயல்பட்டினம், திருச்செந்தூர் வழியாக நெடுஞ்சாலை துறை செயல்படுத்த வேண்டும், என்று கூறியிருந்தார்.

வாழவல்லான் செங்கல் சூளை உரிமையாளர்கள் சங்க தலைவர் பேச்சிமுத்து கொடுத்த மனுவில், வாழவல்லான் பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளன. மாவட்ட நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் செலுத்தி மணல் அள்ளி தொழில் செய்ய சட்டம் இயற்றப்பட்டது.

தற்போது அதிகாரிகள், பணம் கட்டி மணல் அள்ள, தாசில்தார், வட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் சுற்றுசூழல் ஆணையத்திடம் இருந்து தடையில்லா சான்று வேண்டும் என்று கேட்கிறார்கள்.

அந்த சான்று பெற சுமார் ரூ.2 இலட்சம் வரை தேவை படுகிறது. கால நேரமும் அதிகமாகிறது. இதனால் தொழில் பாதிக்கப்படுகிறது. நாங்கள் ரூ.5 ஆயிரம் கட்டிய இடங்களில் சான்று இல்லாமல் மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி தர வேண்டும், என்று கூறி உள்ளார்.

திருவைகுண்டம் செக்காரக்குடிப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கருகிய பயிர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், “எங்கள் பகுதியில் உளுந்து, பாசி, மக்காச்சோளம், எள், பருத்தி, மல்லி போன்றவை பயிர் செய்யப்பட்டு இருந்தன.

பருவ மழை பொய்த்ததால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. எங்கள் பகுதியை வறட்சிப் பகுதியாக அறிவித்து எங்களுக்கு நிவாரண உதவி வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டிருந்தனர்.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் வெற்றி: 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று விஜய் ..! செங்கோட்டையன் பேட்டி | TVK Vijay
அவினாசி தொகுதியில் பா.ஜ.க வெற்றி உறுதி! மத்திய அமைச்சர் எல். முருகன் தேர்தல் குறித்து அதிரடி பேட்டி