திமுக பிரமுகர் அரிவாளால் கண்மூடித்தனமாக வெட்டிக் கொலை…

First Published Dec 20, 2016, 8:57 AM IST
Highlights


வண்டலூர்,

வண்டலூர் அருகே தி.மு.க. பிரமுகர், மர்ம கும்பலால் அரிவாளால் கண்மூடித்தனமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் திமுகவினர் இரகளையில் ஈடுபடலாம் என்று எண்ணிய வியாபாரிகள் கடைகளை அடைத்து வீடுத் திரும்பினர்,

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராக இருப்பவர் விசயராஜ் (40). இவர், காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரை அடுத்த ஓட்டேரி 7–வது பிரதான சாலையில் வசித்து வந்தார். இவருக்கு முத்தமிழ்செல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

விசயராஜ், ஓட்டேரியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். நேற்று இரவு அவர் தன்னுடைய நிதி நிறுவனம் முன்பு நின்றுக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு காரில் வந்த மர்ம கும்பல் சட்டென விசயராஜ் மீது பெட்ரோல் குண்டை வீசினர். இதில் அவர் தடுமாறினார். இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த கும்பல், விசயராஜை அரிவாளால் கண்மூடித்தனமாக வெட்டியது.

இந்த கொலைவெறிச் செயலால சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார் விசயராஜ்.

இந்த தகவலை அறிந்த தி.மு.க.வினர் அங்கு கூடினர். இதனால் அந்தப் பகுதி பதற்றத்துடன் காணப்பட்டது. இதனையடுத்து திமுகவினர் இரகளையில் ஈடுபடலாம் என்று எண்ணிய வியாபாரியகள் தனக்கு எதுக்கு வம்பு என்று கடைகள் அடைத்துவிட்டு வீடு திரும்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள் விசயராஜின் உடலை மீட்டு உடற்கூராய்வு சோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வெறித்தனமான கொலைச் சம்பவம் குறித்து காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், கடந்த 2001, 2006–ஆம் ஆண்டில் வண்டலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விசயராஜ் தோல்வி அடைந்தார். தற்போது அந்த இடம் ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு நடைபெறுவதாக இருந்த உள்ளாட்சி தேர்தலில் வண்டலூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு தன்னுடைய மனைவி முத்தமிழ்செல்வி போட்டியிட மனுதாக்கல் செய்திருந்தார்.

எனவே, தேர்தல் முன்விரோதம் காரணமாக விசயராஜ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது நிதி நிறுவனத்தின் மூலம் எதாவது மோசடி செய்ததால் ஏற்பட்ட கொலையா? போன்ற பல்வேறு கோணங்களில் காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தப் பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க காவலாளர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர்.

 

 

click me!