
Bharat bandh : அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனே திரும்ப பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு INTUC, AITUC, CITU, HMS, SEWA, AIUTUC, AICCTU, LPF, UTUC மற்றும் TUCC போன்ற தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தை முன்னின்று நடத்துகின்றன. இதனையேற்று பல மாநிலங்களி்ல் வேலை நிறுத்த போராட்டமானது தீவிரமாக நடைபெற்றது.
குறிப்பாக கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலமான கேரளாவில் பெரிய அளவில் போராட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தம் நடைபெற்றது. நாடு முழுவதும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர், தமிழகத்தை பொறுத்தவரை இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச, சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. ஆதரவு தெரிவித்து உள்ளன. இருந்த போதும் தமிழகத்தில் பெரிய அளவில் வேலை நிறுத்த போராட்டங்கள் நடைபெறவில்லை. வழக்கம் போல் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கியது.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் 650 க்கு மேற்பட்ட வழித்தடங்களுக்கு வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர் நடத்துனர்களுக்கு மாற்றாக ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஓட்டுனர்கள் நடத்துனர்கள் பெருமளவில் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தனர்.
அதே நேரம் பல இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது. இதனால் ஒரு சில மணி நேரங்கள் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக சிஐடியு தலைவர் சௌந்தர்ராஜன் கூறுகையில், இன்று 11 அனைத்திந்திய மத்திய அமைப்புகள், 40 கும் மேற்பட்ட துறை வாரிய அமைப்புகள் இந்தியா முழுவதும் இருக்கும் விவசாய அமைப்புகள், விவசாய தொழிலாளர்கள் அமைப்புகள் மற்றும் பல்வேறு வெகுஜன அமைப்புகள் முன்னிலையில் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் வேலை நிறுத்தத்தில் 30 இருந்து 35 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளனர் என தெரிவித்தார்.
போராட்டத்தில் பங்கேற்பது அரசு அலுவலகங்களின் சாதாரண செயல்பாட்டை பாதிக்கும் என்பதால், அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்க கூடாது எனவும், தமிழ்நாடு அரசு பணிக்கு வராத அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் படிகள் பிடித்தம் செய்யப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பணிக்கு வருகை தந்தவர்கள் வருகை தராதவர்கள் பட்டியலை காலை 11 மணிக்குள் துறைவாரியாக பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்து.
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் தலைமைச் செயலகம், அரசு அலுவலகங்கள் மற்றும் ஆசிரியர்கள் வழக்கம் போல பணிக்கு வருகை தந்திருந்தனர். அந்த வகையில் சுமார் 90 சதவீதம் பேர் பணிக்கு வந்துள்ளதாக துறை வழியாக பட்டியல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் 10 % அரசு ஊழியர்கள் மட்டும் இன்றைய தின்ம ஆப்சென்ட் ஆனதாகவும் கூறப்படுகிறது. எனவே இன்றைய பணியில் கலந்து கொள்ளாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.