8 வழிச் சாலைக்கு தடை - கேக் வெட்டி கொண்டாடிய சேலம் மக்கள்; அம்மனுக்கு கற்பூரம் ஏற்றியும் வழிபாடு...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 23, 2018, 9:31 AM IST
Highlights

எட்டு வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் சேலம் மக்கள் மற்றும் விவசாயிகள் கேக் வெட்டியும், இனிப்பு ஊட்டிக் கொண்டும் மகிழ்ச்சியை பகிர்ந்தனர். 
 

சேலம் 

எட்டு வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் சேலம் மக்கள் மற்றும் விவசாயிகள் கேக் வெட்டியும், இனிப்பு ஊட்டிக் கொண்டும் மகிழ்ச்சியை பகிர்ந்தனர். 

'பாரதமாலா பரியோஜனா' என்ற பெயரில் சேலம் - சென்னை இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் எட்டு வழிச்சாலை போட மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. இத்திட்டத்தால் 277.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலை அமையும். இதற்காக 2343 எக்டர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. நிலத்தை கையகப்படுத்தும் ஏற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது.

இந்த திட்டத்திற்காக காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்துதான் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. மட்டுமின்றி விவசாய நிலங்கள், வீடு, கிணறு, காட்டை அழித்து அப்படியொரு சாலை எங்களுக்கு வேண்டாம் என்று இம்மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி தமிழக மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும், தமிழக அரசு, காவலாளார்கள் மூலம் எட்டுவழிச்சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அனைவரையும் சிறுவர் முதல் மூதாட்டி வரை அனைவரையும் கைது செய்து வருகிறது. நிலத்தைத் தரமறுக்கும் விவசாயி, மக்களை காவல்துறை மற்றும் அதிகாரிகளை வைத்து மிரட்டி நிலம் பறிப்பும் நடக்கிறது. 

இதனால், அரசின் செயலை எதிர்த்து மக்கள் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர். அப்போதும் நிலத்தை அளந்து முட்டுக்கல் நட்டு, இழப்பீடு கணக்கெடுக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் உள்ள மின்னாம்பள்ளி, இராமலிங்கபுரம், குள்ளம்பட்டி, குப்பனூர், பாரப்பட்டி, நிலவாரப்பட்டி மற்றும் பூலாவரி போன்ற கிராம மக்கள் பல்வேறு வழிகளில் போராடி உள்ளனர். எட்டு வழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டினர். மாடுகளுக்கும் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். அம்மனுக்கு கோரிக்கை மனு கொடுத்தும் கூட போராட்டம் நடத்தி தெறிக்க விட்டனர்.

இப்படியிருக்க எட்டு வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளை எதிர்த்து தருமபுரியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தராஜன் மற்றும் விவசாயிகள் சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தனர்.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், "எட்டு வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது" என்று நேற்று முன்தினம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பைக் கேள்விப்பட்டதும் எட்டு வழிச் சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். அம்மனிடம் வைத்த கோரிக்கைக்கு சாமி செவி சாய்த்தது போன்றே இப்பகுதி மக்கள் அனைவரும் சந்தோஷம் அடைந்தனர்.

இந்த சந்தோஷத்தை இப்பகுதிகளில் உள்ள மக்கள் அம்மனுக்கு கற்பூரம் ஏற்றியும், எலுமிச்சம்பழங்கள் வைத்தும் வழிபட்டு நன்றித் தெரிவித்தனர்.  பின்னர் கோயில் திடலில் கேக் வெட்டிக் கொண்டாடினர். ஒருவருக்கொருவர் இனிப்பு ஊட்டிக் கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்தனர். 

விவசாயத்தைத் தவிர வேறு தொழில் தெரியாத எங்களது விளைநிலத்தை பறித்து போடப்படும் இந்த சாலை வேண்டாம் என்று பலமுறை கூறினோம். அதற்கு ஒருவழியாக வழி பிறந்தது. இடைக்கால தடை போட்டதுபோல, திட்டத்திற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் இப்பகுதி மக்கள்.

click me!