சென்னை மூடப்பட்ட 6 சுரங்கப்பாதைகள்… குளம் போல் தேங்கிய வெள்ள நீர்!!

By Narendran SFirst Published Nov 8, 2021, 12:26 PM IST
Highlights

சென்னையில் சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கியதால் கங்குரெட்டி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் வில்லிவாக்கம் சுரங்கப்பாதை ஆகிய ஆறு சுரங்கப்பாதைகள் மூடப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை முழுவதும் கடந்த 6 ஆம் தேதி இரவு தொடங்கிய மழை மறுநாள் காலை வரை நீடித்தது. இதன்காரணமாக வடசென்னை திருவெற்றியூர், காசிமேடு, ராயபுரம், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, பெரம்பூர்  புளியந்தோப்பு,வியாசர்பாடி,கொடுங்கையூர் திருவிக நகர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைநீர் சாலைகளில் குளம்போல தேங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னை கொருக்குபேட்டை சிவாஜி நகர்,அஜீஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புக்குள் புகுந்த மழைநீர் வீடுகளிலும் புகுந்து பொதுமக்கள் அடிப்படை தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதைப்போல் சென்னை  தண்டையார்பேட்டை ரெட்டைக்குழி தெருவில் குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் அடிப்படை தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது மேலும் வீட்டில் தாழ்வான பகுதியில் இருக்கக்கூடிய நபர்கள் முதல் தளத்தில் மாட்டி தவித்து வருகின்றனர். சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி உள்ளது.

இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் தேங்கி உள்ள மழைநீரை உடனடியாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். சென்னை தேனாம்பேட்டை விஜயராகவா சாலை, கிரியப்பா சாலை, திரு.வி.க நகர் குடியிருப்பு பகுதி உள்ளிட்ட இடங்களில் மழைநீர் இடுப்பளவு தேங்கி உள்ளது. இதனால் அங்குள்ள வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகளில் சிக்கிக் கொண்ட முதியவர்கள் மற்றும் குழந்தைகளை தீயணைப்புத்துறை வீரர்கள் ரப்பர் படகுகள் மூலம் பத்திரமாக மீட்டனர். விஜயராகவா சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

இதனால் அங்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளத்தில் வெள்ள நீர் புகுந்தது. மேலும் அப்பகுதியில் பராமரிப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அச்சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அசோக்நகரின் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில் சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதையில் ஓடிய மழைநீரில் பொதுமக்கள் மீன்பிடித்தனர். வெள்ளநீர் நிரம்பியதால் பல சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து தடைப்பட்ட நிலையில், அரங்கநாதன் சுரங்கப்பாதையில் ஆறுபோல ஓடி வந்த நீரில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மீன் பிடித்தனர். இந்த நிலையில் சென்னையில் ஆறு சுரங்கப்பாதைகள் மழை காரணமாக மூடப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கியுள்ளன.

இதையடுத்து கங்குரெட்டி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் வில்லிவாக்கம் சுரங்கப்பாதை ஆகிய ஆறு சுரங்கப்பாதைகள் மூடப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சென்னையில் பெய்து வரும் கனமழை சாலையில் தேங்கியுள்ள மழைநீர் காரணமாக  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் மின்சாதன பொருள்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, காா் ஆகியவற்றுக்குள் மழைநீா் புகுந்ததால் அவை பழுதாகி சாலையிலே நின்றன. வாகனங்களுக்குள் மழைநீா் புகாமல் இருக்க வேளச்சேரி மேம்பாலத்தின் இரு புறங்களிலும் அப்பகுதிகள் மக்கள் காா் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வைத்தனா்.

click me!