
கரூர்
வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வை கரூரில் மட்டும் 30,725 பேர் எழுதுகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்தார்.
கரூர் ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட கருவூல பாதுகாப்பு அறையில் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி - 4 க்கான கேள்வித்தாள் இருப்பில் உள்ளதை நேற்று மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் பார்வையிட்டார்.
அதபின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வரும் 11-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்படவுள்ள தொகுதி - 4-க்கான போட்டித் தேர்வை கரூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்து 725 பேர் எழுத இருக்கின்றனர்/ இவர்களுக்கு 96 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
தேர்வுப் பணியில் 96 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 96 ஆய்வு அலுவலர்கள், 1540 அறை கண்காணிப்பாளர்கள், 19 மண்டல அலுவலர்கள் மற்றும் 15 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தேர்வெழுதுவோர் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைய கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்து வசதியும், மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத ஏதுவாக தேர்வு கூடங்களில் தரைதளத்தில் இட ஒதுக்கீடும் செய்யப்பட்டு உள்ளது.
கரூர் மையத்தில் ஒரே பெயருடைய பள்ளிகள் அதிகம் உள்ளது என்பதால் தேர்வாளர்கள் தங்களுக்கு உரிய சரியான தேர்வு மையத்தை தேர்வுக்கூட அனுமதி சீட்டில் சரிபார்த்து, சரியான தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
இந்த பேட்டியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்யபிரகாஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சைபுதீன், மாவட்டக் கருவூல அலுவலர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.