
வேலூர்
சந்தன மரங்களை வெட்டி ஆந்திராவிற்கு கடத்தி சென்ற மூவரை ஆம்பூர் வனத்துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் பனங்காட்டேரி பகுதியைச் சேர்ந்த சின்னராஜ், மகன் சேட்டு மற்றும் மருமகன் வெங்கடேசன். இவர்கள் மூவரும் புதன்கிழமை மதியம் ஆம்பூர் பச்சக்குப்பம் அருகே இருசக்கர வாகனத்தில் ஒரு சாக்கு மூட்டையில் சந்தமரங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து சென்றுள்ளனர்.
அப்போது அவ்வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினருக்கு இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்களை நிறுத்தி சோதனையிட்டனர். அந்தச் சோதனையில் அவர்கள் வைத்திருந்த சாக்குப் பையில் சிறு சிறு துண்டுகளாக சந்தன மரங்களை வைத்திருப்பது தெரிந்தது. உடனே, வனத்துறையினர் அந்த மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், இவர்கள் மூவரும் ஜமுனாமத்தூர் மந்தாரகுட்டை பகுதியில் உள்ள
தீர்த்தஓடை காப்புக்காட்டு பகுதியில் இருந்து சந்தன மரங்களை வெட்டியுள்ளனர். பின்னர், அந்த மரங்களை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஆந்திர மாநிலத்திற்குக் கொண்டு செல்வதாகவும், அங்கே வீகோட்டா என்ற பகுதியில் விற்பனைக்கு செய்யப் போவதாகவும் விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் இம்மரத்தின் மதிப்பு சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என தெரிய வந்துள்ளது.
தற்போது செம்மரம் வெட்டிக் கடத்தும் கும்பலை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் சந்தன மரங்களை மொத்தமாக எடுத்து செல்ல முடியாத காரணத்தால் சிறு பகுதிகளாக பிரித்து இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்று விற்பனை செய்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் வனத்துறையினர்.
மேலும், சந்தன மரங்களை இதுபோன்று தந்திரமாக கடத்துவோரை தீவிர விசாரணையில் ஈடுபட்டு பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்தனர்.