
பெரம்பலூர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 205 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜியோ ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி. ஆளவந்தார், ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் கணேசன், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் அருள்ஜோதி ஆகியோர் தலைமை வகித்தனர்.
காலை 11 மணி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் மகராஜன், மாவட்ட செயலர் பாரதிவளவன், மத்திய செயற்குழு உறுப்பினர் குமரி அனந்தன்,
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் இ.மரியதாஸ், மாவட்டச் செயலர் சா.இளங்கோவன் மற்றும் 90 பெண்கள் உள்பட 205 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரையும் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் அனைவரும் பிற்பகல் 2 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.