நான்காவது முறையாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் தேதி மாற்றம்; இந்தமுறை இடமும் மாறியது…

First Published Sep 16, 2017, 8:36 AM IST
Highlights
The change of date of the MGR century festival for the fourth time This time the place has changed ...


நீலகிரி

உதகையில் நடைபெறுவதாக இருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் தேதி நான்காவது முறையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும், இந்தமுறை இவ்விழா நடைபெறும் இடமும் மாற்றப்பட்டு உள்ளது.

மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசின் விழாவாக மாநிலம் எங்கும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இவ்விழா நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 11-ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து, இந்தத் தேதி மாற்றப்பட்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெறும் எனவும், அதையும் மாற்றி செப்டம்பர் 26-ஆம் தேதி எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதேபோல, இந்த விழா நடைபெறும் இடமாக உதகை குதிரைப் பந்தய மைதானம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இம்மைதானத்தில் இவ்விழாவை நடத்தக் கூடாது என தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் சார்பில் எதிர்ப்புகள் தெரிவித்ததனர்.

இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, நீலகிரி மாவட்ட அதிமுக செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜுனன் ஆகியோர் இம்மைதானத்தை வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து இரவில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில், உதகை சுற்றுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில் கொண்டும், இரவு நேரங்களில் மட்டுமே பெய்யும் மழையால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பான தகவல்கள் தமிழக முதல்வருக்கும், நீலகிரி மாவட்டத்துக்கான பொறுப்பு அமைச்சரான உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில் உதகையில் கே.ஆர்.அர்ஜுனன் நேற்று செய்தியாளர்களிடம், “நீலகிரி மாவட்டத்தின் தட்டவெப்ப நிலையையும், பெய்யும் பலத்த மழையையும் கருத்தில் கொண்டும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் உதகையில் செப்டம்பர் 26-ஆம் தேதிக்குப் பதிலாக அக்டோபர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

அதேபோல, மழை நீர் தேங்கி குளம்போல காட்சியளிக்கும் உதகை குதிரைப் பந்தய மைதானத்துக்குப் பதிலாக இவ்விழா உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்திலேயே நடத்தப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.

click me!