
நாமக்கல்
கொல்லிமலையில் பெய்து வரும் தொடர் கன மழையால் ஆகாயகங்கை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க 7-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கடந்த 13 நாள்களில் மட்டும் சுமார் 300 மி.மீ அளவு மழைப் பதிவாகி உயுள்ளது. இதனால் வறண்டு கிடந்த ஆகாய கங்கை அருவி, மாசிலா அருவி, நம்ம அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
இரவு நேரங்களில் பெய்யும் மழையால், காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி வருகின்றன.
கடந்த சில நாள்களாக சின்ன கோவிலூர், பெரிய கோவிலூர், தெம்பளம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்வதால், அங்குள்ள காட்டாறுகளில் பெருக்கெடுத்த தண்ணீர் ஆகாய கங்கை அருவியில் செந்நிறத்தில் கொட்டுகிறது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆகாய கங்கையில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்றோடு 7-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் நுழைவு வாயில் பூட்டப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.