
7 ஆண்டுகளுக்குப் பின் சாரண சாரணியர் இயக்க மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடக்கிறது. இந்த தேர்தலில் பள்ளிக்கல்வித்துறை முன்னாள் இயக்குநர் மணியும், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் நேரடியாக களம் காண்கின்றனர்.
சாரண சாரணியர் இயக்கத்தின் மாநில தலைவராக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இருந்துவந்தார். ஆனால் கடந்த 2010-ம் ஆண்டில் தங்கம் தென்னரசு தலைவராக இருந்தபோது நிர்வாகத்தில் சலசலப்புகள் ஏற்பட்டதால் சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து சாரண சாரணியர் இ்யக்க மாநில தலைவரை தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பதவிக்காலத்தை 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகளாக நீட்டித்து தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. தலைவர் பதவிக்கு சிலர் பள்ளிக் கல்வித்துறை முன்னாள் இயக்குநர் மணியை பரிந்துரை செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை முன்மொழிந்தனர். அவரை சிலர் வழிமொழிந்தனர்.
இதையடுத்து சாரண சாரணியர் மாநில தலைவர், துணைத்தலைவர், மாவட்ட குழு உறுப்பினர், ஒருங்கிணைப்பு பயிற்சியாளர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.
மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் என 505 பேர் ரகசிய வாக்குச்சீட்டு முறையில் வாக்களிக்கின்றனர்.
இந்த தேர்தலில் எச்.ராஜா போட்டியிடுவதற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சாரணர் இயக்கத் தலைவர் தேர்தலில் ராஜா வெல்கிறாரா வீழ்கிறாரா என்பதை பார்ப்போம்.