
பெரம்பலூர்
தனியார் நிதி நிறுவனம் பணத்தை வாங்கிக் கொண்டு அதனை திருப்பி தராமல் ஏமாற்றியதால் அந்த நிறுவனத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட பெரம்பலூர் ஆட்சியரிடம் வே.சாந்தாவிடம் மனு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், மலையாளப்பட்டி, அரும்பாவூர், பூலாம்பாடி, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் வே.சாந்தாவிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், “மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில், பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியில் கடந்த 2014-ல் கிளை அலுவலகம் தொடங்கப்பட்டது. இந்த அலுவலகத்தின் மூலம் 100-க்கும் மேற்பட்ட இடைத்தரகர்கள் நியமிக்கப்பட்டு, சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்த உறுப்பினர்களிடமிருந்து மாதத் தவணையாக ரூ.100 முதல் ரூ.10 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. ஐந்தரை ஆண்டுகளில் செலுத்தப்பட்டத் தொகைக்குக் கூடுதல் வட்டி அல்லது அந்தத் தொகைக்கேற்ப நிலம் வழங்கப்படும் என தெரிவித்ததைத் தொடர்ந்து, கிராம மக்கள் அதிகளவில் உறுப்பினராகச் சேர்ந்தனர்.
இந்த நிலையில், கடந்தாண்டு பெரம்பலூரில் செயல்பட்டு வந்த கிளை அலுவலகம் மூடப்பட்டது. எங்களுக்கு பணம் திரும்ப கிடைக்கவில்லை.
எனவே, தனியார் நிதி நிறுவனத்தில் செலுத்திய தொகையை திரும்ப பெற்றுத்தர கோரியும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறியிருந்தனர்.