
மயிலாடுதுறை,
இரயிலில் 200 கிலோ ரேசன் அரிசியை கடத்தியவர்கள் இரயில்வே பாதுகாப்பு படையினரைக் கண்டதும் கடத்தியவர்கள் ரேசன் அரிசியை இரயில் பெட்டியிலேயே விட்டுச் சென்றனர். அதனை, காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.
இரயில்களில் ரேசன் அரிசி கடத்தப்படுகிறது என்ற தகவல் திருச்சி கோட்ட இரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஆனிவிஜயாவிற்கு கிடைத்தது.
உடனே, இதுகுறித்து, குழு அமைத்து மயிலாடுதுறை இரயில் நிலையத்தில் சோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதன்படி, இரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளர் ஆல்பர்ட் தினகரன் தலைமையில் காவல் ஏட்டுகள் ஆதிமூலம், பாலசுப்பிரமணியன், திருட்டு தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் வெங்கடாசலம் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து மயிலாடுதுறை இரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காவலாளர்கள், விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்த பயணிகள் இரயிலில் உள்ள பெட்டிகளில் சோதனை செய்தனர்.
அதில் 10 மூட்டைகளில் மொத்தம் 200 கிலோ எடை கொண்ட ரேசன் அரிசியை மர்மநபர்கள் விட்டுச் சென்றது தெரியவந்தது.
உடனே காவலாளர்கள், இரயிலில் கடத்தி வரப்பட்ட ரேசன் அரிசியை பறிமுதல் செய்து, மயிலாடுதுறை வட்ட வழங்கல் அலுவலர் சாந்தியிடம் ஒப்படைத்தனர்.
அதனை வட்ட வழங்கல் அலுவலர், மயிலாடுதுறை சித்தர் காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
காவலாளர்கள் சோதனை மேற்கொள்வதை தெரிந்து கொண்ட மர்மநபர்கள் ரேசன் அரிசியை இரயில் பெட்டியிலேயே விட்டுவிட்டுச் சென்றிருக்கலாம் என்று காவலாளர்கள் தெரிவித்தனர்.