
ஜெயலலிதா நினைவிடத்தில் நிறுத்தப்பட்ட பாடல்… பராமரிப்பு பணிகளும் நடைபெறாததால் தொண்டர்கள் அதிர்ச்சி…
சென்னை மெரினா எம்ஜிஆர் நினைவிடத்தில் உள்ள ஜெயலலிதா சமாதியில் அ.தி.மு.க. சார்பில் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிபுப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.
ஜெயலலிதா மறைந்தததை அடுத்து அவரது உடல் எம்ஜிஆர் நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த சமாதியில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாள்தோறும் கட்சி நிர்வாகிகள் பூக்களை கொண்டு வந்து சமாதியை அலங்கரித்து வைப்பார்கள்.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதால், இனி அரசு அலுவலகங்கள், அரசு பொது இடங்கள் போன்றவற்றில் அவரது படங்கள் இடம் பெறாது என்ற முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
இதனால் பல இடங்களில் ஜெயலலிதாவின் படங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே கடந்த சில நாட்களாக ஜெயலலிதா சமாதியில் எந்த பராமரிப்பும் பணிகளும் நடைபெறவில்லை. ஜெயலலிதா சமாதியில் காய்ந்த பூக்களே காணப்பட்டன. தொண்டர்கள் அன்பின் மிகுதியால் கொண்டு வரும் பூக்கள் மட்டுமே ஜெயலலிதா சமாதியில் தூவப்பட்டு வருகிறது.
மேலும், ஜெயலலிதா சமாதியில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் வானமே இடிந்தது அம்மா... வாழ்வே முடிந்தது அம்மா...என்ற பாடலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் நாள்தோறும் ஜெயலலிதா நினைவித்துக்கு வந்து செல்லும் அதிமுக. தொண்டர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.