
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய மகளிர் அணி கேப்டன் மிதாலி ராஜ் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அதேபோல், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தீப்தி சர்மா 17 இடங்கள் முன்னேறி 38-ஆவது இடத்துக்கும், திருஷ் காமினி 11 இடங்கள் முன்னேறி 41-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இந்த இடத்துக்கு முன்னேறியிருப்பது இது முதல் முறையாகும்.
வங்கதேச அணி கேப்டன் ருமானா அகமது 4 இடங்கள் முன்னேறி, 31-ஆவது இடத்துக்கும், பாகிஸ்தானின் நைன் அபிதி 2 இடங்கள் முன்னேற்றம் கண்டு 26-ஆவது இடத்துக்கும் வந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா கேப்டன் வான் நீகெர்க் பேட்டிங் பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 12-ஆவது இடத்துக்கும், பந்துவீச்சாளர்கள் பட்டியலிலும் 2 இடங்கள் முன்னேறி 15-ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சாளர்கள் பட்டியலில், பாகிஸ்தானின் சனா மிர் இரு இடங்கள் முன்னேறி 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் எக்தா பிஷ்த் 3 இடங்கள் முன்னேறி 11-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவின் சுன் லுஸ் 28-ஆவது இடத்துக்கும், வங்கதேச கேப்டன் ருமானா அகமது 29-ஆவது இடத்துக்கும், இலங்கையின் கேப்டன் இனோகா ரனவீரா 33-ஆவது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர்.
ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில், தென் ஆப்பிரிக்காவின் க்ளோ ட்ரையான் 13 இடங்கள் முன்னேறி 23-ஆவது இடத்துக்கும், சக வீராங்கணை மாரிஸானே காப் 2 இடங்கள் ஏற்றம் கண்டு 22-ஆவது இடத்துக்கு வந்துள்ளனர்.