
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், விதிமுறைகளை பின்பற்றாமல் எருதுவிடும் விழா நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கதிரவன் எச்சரித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல கிராமங்களில் எருது விடும் விழா நடந்து வருகிறது. பர்கூரில் நேற்று முன்தினம் நடந்த எருது விடும் விழாவில், கூட்டநெரிசலில் சிக்கி ஒருவரும், மாடு முட்டி ஒருவரும் இறந்தனர்.
அதேபோல், இராயக்கோட்டை அருகே பால்னாம்பட்டியில் எருது விடும் விழாவை பார்க்க சென்ற ஒருவரும் இறந்தார்.
இந்த மாவட்டத்தில் ஒரே நாளில், மூன்று பேர் இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பர்கூர் அடுத்த கோத்தி அழகனூர் கிராமத்தில் நேற்று நடந்த எருது விடும் விழாவை ஆட்சியரும், எஸ்.பி.,யும் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது:
“எருது விடும் விழாவுக்கு, முறையாக அனுமதி பெற வேண்டும். விழா நடைபெறும் பகுதிகளில், இரண்டு அடுக்கு பாதுகாப்புகளை விழாக்குழுவினர் மேற்கொள்ள வேண்டும். ஓடக்கூடிய காளைகளுக்கு எந்தவித இடையூறுகளும் கொடுக்கக் கூடாது.
குறிப்பாக பார்வையாளர்கள் பக்கமாக மாடுகள் வராதபடி, தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
எருது விடும் விழா நடத்துவது தொடர்பாக, 17 விதிமுறைகள் உள்ளன. அதை விழா குழுவினர் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
அனுமதியின்றி எருது விடும் விழா நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.